ஈழத் தமிழர்களை ஆதரித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரணி

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக கடந்த வாரம் ‘ஈழத் தமிழர் தோழமைக் குரல்’ பேரணியும் மறியல் போராட்டமும் நடத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (17.02.08) அடுத்த நாள் புதன்கிழமை ஆகிய இரு நாட்களிலும் நடைபெற்ற பேரணி மற்றும் மறியல் போராட்டங்களில்

இந்திய அரசே! ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனக்கொலைப் போருக்குத் துணை போகாதே!

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்காக சிறிலங்கா அரசின் மீது நடவடிக்கை எடு! தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புக்கொடு!

என்ற நான்கு கோரிக்கைகளின் அடிப்படையில் ‘ஈழத் தமிழர் தோழமைக் குரல்’ சார்பில் டில்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் முன் இப்பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

புதுடில்லி ‘மந்தி அவுஸ்’ என்ற இடத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (17.02.09) புறப்பட்ட பேரணியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும், புதுடில்லி வாழ் தமிழர்களும் தமிழகக் குழுவினருடன் சேர்ந்து கொண்டனர்.

அடுத்த நாள் புதன்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அதே நான்கு கோரிக்கையை வலியுறுத்தி ‘மந்தி அவுசில்’ இருந்து நாடாளுமன்ற சாலை வழியாக ‘ஜந்தர் மந்தர்’ வரை பேரணி நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் படங்களை உயர்த்திப் பிடித்து எழுச்சியுடன் முழக்கம் எழுப்பிச் சென்றனர்.

இரண்டு நாள் பேரணியின் போதும் வழி நெடுகிலும் மக்கள் ஆர்வத்துடன் முழக்கங்களை செவிமடுத்தனர்.

ஆங்கிலத்தில் அச்சிட்ட ஈழத் தமிழர் வரலாறு, ஈழப் போராட்டத்தின் நியாயம், விடுதலைப் போர்க்களப் பணி பற்றிய வெளியீடுகள் மக்களுக்குத் கொடுக்கப்பட்டன.

தீக்குளித்த ‘வீரத்தமிழன்’ முத்துக்குமாரின் உருவப் படங்களையும், தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் வண்ணப் படங்களையும், மும்மொழிகளிலும் கோரிக்கை முழக்கப் பதாகைகளையும் ஊர்வலத்தினர் எடுத்துச் சென்றனர்.

பேரணி நாடாளுமன்றத்தை நெருங்குவதற்கு முன்பே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், டாக்டர் கிருஷ்ணன், புதுடில்லி பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபா ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர்.

இந்திய தலைநகரில் தமிழீழ ஆதரவுப் போராட்டங்கள் பலமுறை நடந்துள்ள போதிலும், ஈழத் தமிழர் தோழமைக் குரலின் இந்தப் போராட்டத்தில்தான் “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!” என்ற கோரிக்கை முதன்முதலாக எழுப்பப்பட்டது.

தலைவர் பிரபாகரனின் படங்களை ஊர்வலத்தினர் உயர்த்திச் சென்றதும் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்தை நடத்துவதற்காக போராட்டக் குழுவினர் சென்னை, எழும்பூர் தொடருந்து நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) காலை 9:00 மணியளவில் புதுடில்லி நோக்கி புறப்பட்டனர்.

‘ஈழத் தமிழர் தோழமைக் குரல்’ அமைப்பாளர் பா.ஜெயப்பிரகாசம் தலைமையில் அமைப்புக் குழு உறுப்பினர் தியாகு, கவிஞர் தாமரை, பேராசிரியர் சரசுவதி ஆகியோர் முன்னிலையில் வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் வே.ஆணைமுத்து, திரைக்கலைஞர்கள் மன்சூர் அலிகான், ரமேஸ்கண்ணா முதலானோர் வாழ்த்தி பேசி வழியனுப்பி வைத்தனர்.

கோரிக்கை முழக்கங்களோடு விடைபெற்று புறப்பட்ட போராட்டக் குழுவில் எழுத்தாளர்களும் மாணவர்களும் வழக்கறிஞர்களும் பெண்ணுரிமைப் போராளிகளும் தமிழ் உணர்வாளர்களுமாக 150 பேர் இடம்பெற்றனர்.

மேலும் சிலர் தனித்தனியே புதுடில்லி சென்று போராட்டக் குழுவுடன் சேர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கங்கள்:

“தடையை நீக்கு! தடையை நீக்கு!
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!”

“கொல்லாதே! கொல்லாதே!
ஈழத் தமிழரைக் கொல்லாதே!”

“இந்திய அரசே!
கொலைகாரச் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்காதே!
பயிற்சி கொடுக்காதே!
ஆதரவு கொடுக்காதே!”

“காந்தி தேசம் கொடுக்குது!
புத்த தேசம் கொல்லுது!”

“பதுங்குகுழியில் தமிழனாம்!
குண்டுபோட இந்தியனாம்!”

“இந்திய அரசே!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!”

“பயங்கரவாதி யாரடா?
ராஜபக்சே தானடா!
மன்மோகன் சிங் தானடா!
சோனியா காந்தி தானடா!”

“இந்திய அரசே!
தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும்
சிங்கள அரசின் மீது நடவடிக்கை எடு!”

இந்த முழக்கங்களை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எழுப்பியவாறு

“சோனியா காந்தியே!
எங்களையும் கொலை செய்!
நாங்களும் தமிழர்களே!”

என எழுதிய பெரிய பதாகை பேரணியின் முன் எடுத்துச் செல்லப்பட்டது. இது புதுடில்லி மக்களிடையே பெரும் பரபரப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தியது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.