திருச்சியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொறியியல் கல்லூரி மாணவர்கள் திருச்சி மத்தியத் தொடர் வண்டி நிலையம் அருகில் கடந்த ஞாயிறு அன்று இந்தியப் படைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஈழத்தில் இந்தியாதான் அநீதமான போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியா உடனடியாக இந்தப் போரிலிருந்து விலகாவிட்டால், மாணவர் சமுதாயம் அடுத்தகட்ட அதிர்ச்சி தரும் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக எச்சரித்தனர்.
பொறியியல் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து இந்தப் போராட்டத்திற்குத் தலைமையேற்ற மாணவர் அஜித் குமார் ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் ஈழ வரலாற்றைச் சுருக்கமாகவும், ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழகத்தில் பரப்பப்பட்டுவரும் தப்பான கருத்துக்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
கண்டன உரை ஆற்றிய தமிழர்களத்தின் மாநில பொதுச்செயலாளர் அரிமாவளவன் அவர்கள், “வரலாறு மிகப்பெரிய ஆசான். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பீற்றிக் கொள்ளும் தமிழர்கள் விசயன் என்னும் வந்தேறிக்கு இலங்கையில் வாழ விட்டு ஆளவிட்ட கதையால் இன்று ஒட்டுமொத்த இனத்தின் வாழ்வே கேள்விக்குறியாக நிற்கிறது. தன் நாடு, தன் மொழி, தன் இனம் என்பதை மறந்து வாழும் இனம் எத்தனைச் சிக்கலுக்கு உள்ளாகிறது என்பது ஈழம் தரும் பாடம்! தமிழகமும் இன்றைக்கு வந்தேறிகளின் வேட்டைக்காடாக கிடக்கிறது. எனவே, இன்றைய மாணவர் எழுச்சி என்பது நாட்டைக் காக்கும் நற்செயலாகப் புலரவேண்டும்” என்று அழைப்பு விடுத்து மாணவர்களை வாழ்த்தினார்.
“இந்தியாவை ஆட்டிப் படைக்கும் வந்தேறிக் கும்பல் இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வீபரீத விளையாட்டை ஈழத்தில் தொடர்கிறது என்பதை காலம் விரைவில் மெய்ப்பிக்கும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் கங்கைச் செல்வன் அவர்களும் மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.