ஊழியர்களிடம் சம்பளத்தை திருப்பி கேட்கும் மைக்ரோசாப்ட்

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் பணிநீக்கம் செய்த சில ஊழியர்களுக்கு தவறுதலாக அதிகப்படியான சம்பளம் வழங்கிவிட்டது. இதையடுத்து அந்த பணத்தை திரும்பத்தருமாறு ஊழியர்களை கேட்டு வருகிறது.

உலக பொருளாதார வீழ்ச்சியினால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திணறி போயுள்ளன. இதன் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 5,000 ஊழியர்களை அடுத்த 18 மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்தது. அதன் முதல்கட்டமாக கடந்த ஜனவரி 22ம் தேதி 1,400 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது.

இதையடுத்து அவர்களுக்கு இழப்பீடும் வழங்கியது. இந்நிலையில் இழப்பீடு வழங்கியதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் குளறுபடி நடத்திருப்பது தெரியவந்துள்ளது. சில ஊழியர்களுக்கு பணம் அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பணம் குறைவாக கொடுக்கப்பட்டவர்கள் நிர்வாகத்திடம் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால், சிலருக்கு பணம் அதிகம் அளிக்கப்பட்ட விவகாரம் நிறுவனத்துக்கு தெரிய வர பல நாட்களாகிவிட்டது. இதில் அந்நிறுவனத்தின் மனிதவள துறையும் அதிக அக்கறை காட்டவில்லை.

இந்நிலையில் சம்பள பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட தவறுதலே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், சம்பள தொகை அதிகம் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கமாறு கடிதம் எழுதியுள்ளது. அதில்,

நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாக தவறு நடந்துவிட்டது. உங்களுக்கு அதிகம் கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பி கொடுங்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் சங்கடங்களுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளது.

இப்படி கடிதம் கிடைத்தவர் ஒருவர் அதை பத்திரிகைக்கு கொடுக்க விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணம் அதிகம் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு சராசரியாக ரூ. 2.2 லட்சம் கூடுதலாக கொடுத்துள்ளது.

முதலில் இது நிறுவனத்துக்கும், ஊழியர்களுக்கும் இடையை உள்ள தனிப்பட்ட விவகாரம் எனக் கூறிய மைக்ரோசாப்ட் பின்னர் தனது தவறுகளை ஒத்துக்கொண்டது.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணம் அதிகம் பெற்ற ஊழியர்கள் அதை திருப்பி கொடுக்க வேண்டும். குறைவாக கொடுக்கப்பட்டவர்களுக்கு பணம் விரைவில் திருப்பி கொடுக்கப்படும். அவர்கள் அனைவரும் மனிதவள துறை தலைவர் லிசா பிரம்மலை நேரில் சந்திக்குமாறு கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.