அம்மா பிறந்த நாளில் இணையும் அம்பானிகள்!

மும்பை: சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனி வியாபார சாம்ராஜ்யங்களை நிலை நிறுத்திய அம்பானி சகோதரர்கள் மீண்டும் ஒன்று சேரப் போவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் தனிப் பெரும் வர்த்தக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த நிறுவனம் ரிலையன்ஸ். இதன் நிறுவனர் திருபாய் அம்பானி மறைவுக்குப் பின் அவரது மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இருவரும் தனித்தனியாகப் பிரிந்தனர்.

முன்னவர் ரிலையன்ஸ் என்ற பெயரில் தொடர்ந்து தொழில் நிறுவனங்களை நடத்த, இளையவர் அனில் திருபாய் அம்பானி குழுமம் என்ற புதிய பெயரில் தனது நிறுவனங்களை நடத்தினார்.

இருவருமே இந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையிலும் உலகின் முதல் நிலைத் தொழில் அதிபர்களாகத் தொடர்கிறார்கள்.

பாகப் பிரிவினைக்குப் பிறகு இந்த இருவரும் வெகு அரிதாகவே சந்தித்துக் கொண்டார்கள். ஆனால் சண்டை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் வழக்குப் போடும் அளவுக்கு நிலைமை போனது.

ஆனால் நீரடித்து நீர் விலகாது என்ற பழமொழியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் அம்பானி சகோதரர்கள்.

இன்று அவர்களின் தாய் கோகிலாபென் அம்பானியின் 75-வது பிறந்த நாள் விழா. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விசேஷமாக இந்த பிறந்த தினத்தை சர்வதேச வர்த்தக சமூகம் உற்றுப் பார்க்கிறது. காரணம், கோகிலாபென் முன்னிலையில் இரு சகோதரர்களும் ஒன்றிணையப் போவதாக எழுந்துள்ள செய்திதான்.

இன்று மாலை நடக்கும் பிறந்த நாள் விழாவில் முகோஷும் அனிலும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்துவிட்டதாக அறிவிக்க வேணடும் என்பது அம்மா கோகிலாபென்னின் விருப்பமாம். தாயின் விருப்பத்தை இருவருமே பூர்த்தி செய்வதாக வாக்களித்துள்ளனராம்.

அதற்கேற்ற உடன்பாடு ஒன்றையும் கோகிலாபென் தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

5 ஆண்டுகளுக்கு முன் சகோதரர்களுக்கும் பெரும் சண்டை வந்தபோது, அதை சுமூகமாகத் தீர்த்து வைத்து, சொத்துப் பிரித்துக் கொடுத்தவரும் கோகிலாபென்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி சகோதரர்கள் மீண்டும் இணைந்தால், அவர்களது ஒருங்கிணைந்த வர்த்தக நிறுவனம்தான் உலகின் முதல்நிலை அந்தஸ்தைப் பிடிக்கும். இணைவார்களா!!

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.