இலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்”: ஐரோப்பிய ஒன்றியம்

வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும் மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்” என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இலங்கையின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு போரில் ஈடுபடும் இரு தரப்பும் அனைத்துலக மனிதாபிமான விதிகளையும், போரியல் விதிகளையும் மதித்தல் வேண்டும். சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இதனை மதிக்க வேண்டும்.

வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் மக்களை வெளியேறவிடாது தடுப்பது கண்டனத்திற்கு உரியது.

வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு வரும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் சோதனைகள் அனைத்துலகத்தின் தராதரத்துடன் இருத்தல் வேண்டும் என்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் பணியாற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.

இந்த முகாம்களுக்கு செல்லும் முழு அதிகாரங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் போன்றவற்றுக்கு வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் நீண்டகாலப் போருக்கு படைத்துறை ரீதியாக தீர்வுகாண முடியாது. விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டு ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகளின் நீடிப்புக்கான விசாரணைகளுக்கு அரசு ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன், அனைத்துலகத்தின் மனித உரிமை விதிகள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.