சத்யம்: புதிய ஆர்டர்கள்…ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசு திட்டம்!

ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தில் ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களைத் தேடிச் செல்வதாகக் கூறப்பட்டு வந்தாலும், அவ்வப்போது புதிய ஆர்டர்களை அந்த நிறுவனம் பெற்று வருகிறது.

சமீபத்தில் ரூ.1,225 கோடிக்கான புதிய ஆர்டர்களை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் சிறந்த ஊழியர்களுக்கு ரூ.1 கோடி ஊக்கப் பரிசுத் திட்டத்தை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.7,800 கோடி மோசடி செய்து சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவும அரது சகோதரரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இன்றுவரை இந்தத் தொகையை எப்படி அவர் மோசடி செய்தார் என்பதை எந்த புலனாய்வு அமைப்பும் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. இப்போது வழக்கு சிபிஐ வசம் போகப் போகிறது.

புதிய நிர்வாகம், புதிய தலைமை என சத்யம் முழுவதுமாக அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இந்நிறுவனத்துக்கு ரூ.1,225 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சத்யம் இயக்குநர்கள் கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், சத்யம் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் இந்த மாத சம்பளம் குறித்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு பரபரப்பான, நெருக்கடியான கால கட்டத்தில், தொடர்ந்து ஒத்துழைத்து வரும் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், சத்யம் புதிய தலைவர் கிரண் கார்னிக்.

நிறுவனம் இப்போதுதான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், உயர் அதிகாரிகள் இதே நிறுவனத்தில் தொடர வேண்டும் என்றும் தலைமை செயல் அதிகாரி மூர்த்தி கேட்டுக் கொண்டார். இதற்காக புதிய ஊக்கத் திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்துள்ளார்.

இதன்படி நிறுவனத்தை திறமையாக வழிநடத்திச் செல்லும் 15 பேருக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத் தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் சத்யம் இயக்குநர் குழு அறிவித்துள்ளது.

Source & Thanks : hatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.