அரசியல்வாதிகள் பேசாததையா சீமான் பேசிவிட்டார்? பாரதிராஜா கேள்வி

அரசியல்வாதிகள் பேசாததையா சீமான் பேசிவிட்டார். எதிலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள சீமானைப் பார்க்க வந்த இயக்குநர் பாரதிராஜா திங்கட்கிழமை கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர் சீமானைப் பார்ப்பதற்கு தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, மணிவண்ணன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் வந்தனர்.

சிறைக்குள் சென்று சீமானைப் பார்த்து விட்டு வெளியில் வந்த இயக்குநர் பாரதிராஜா பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டி:

இயக்குநர் சீமான் வெளியில் இருப்பதை விட சிறையில் இருப்பதே நல்லது. சீமான் ஒன்றும் அரசியல்வாதியல்ல. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். அவர்களைக் கண்டுகொள்வது இல்லை. பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் அணியை விளையாட அனுப்பாத இந்திய அரசு தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அதிகாரப் பங்கீடு தேவை என்று இலங்கை அரசிடம் தமிழன் போராடுகிறான். இதற்காக தமிழினம் கொன்று குவிக்கப்படுகிறது.

சீமான் தனிமனிதன் அல்ல. அவர் பின்னால் நாங்கள் உள்ளோம். இளைஞர்கள் உள்ளனர். ஈழத்தமிழர் பிரச்னைக்கு விடியலைத் தேடுவோம். மிகவிரைவில் இதற்கு வியூகம் அமைத்துப் போராடுவோம் என்றார் அவர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.