போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது: கேகலிய ரம்புக்வெல

தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது; அதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் முதலில் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு சரணடைய வேண்டும் என்றும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் ஒன்றிற்கு தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இணைத் தலைமை நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம் எனவும் நடேசன் அந்த வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா படையினர் வெற்றி பெற்று வரும் நிலையில் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை கோருவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு இணைத் தலைமை நாடுகளின் உதவி ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.

போரில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு போர் நிறுத்தம் அவசியம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.