அழிந்துக் கொண்டிருப்பது அப்பாவி பொது மக்களே: வன்னிப் பேராயர்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு சிறிலங்க படையினர் நடத்திவரும் போரில் அழிந்துகொண்டிருப்பது அப்பாவிப் பொதுமக்கள்தான் என்று வன்னியிலிருந்து பேராயர் அருட்திரு. சாம் இராஜேந்திரன் கூறியுள்ளார்.

உலகளாவிய கிறித்தவ சமூகத்திற்கு ‘அவசர அறைகூவல்’ விடுத்துள்ள அருட்திரு. சாம் இராஜேந்திரன், “வன்னியில் வாழும் எங்கள் வாழ்வு கேள்விக்குறியாகி, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே நாம் உங்களுக்கோர் அவசர அறைகூவலை விடுக்கின்றோம்.

நிம்மதியும் நிரந்தர வாழ்வும் தொலைந்து போன நிலையில் மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு இறுதி மூச்சைப் பிடித்தபடியே அனைத்துலக கிறிஸ்தவ சமூகத்திற்கு இந்த அவசர அறைகூவலை விடுக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

வன்னியில் கொடிய போர் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும், விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் சிறிலங்க அரசால் தமிழ் மக்கள் நாள்தோறும் மிகவும் மோசமான முறையில் கொன்று குவிக்கப்படுகின்றனர், காயப்படுத்தப்படுகின்றனர் என்றும் சாம் இராஜேந்திரன் கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் பாதுகாப்புப் பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது ஆயிரத்திலிருந்து ஆறாயிரம் வரை எறிகணைகள் அரசப் படைகளால் சுடப்படுகின்றன என்றும் மழைபோல் விழும் இந்த எறிகணைகளின் மத்தியில் மீட்புப் பணிகளை எவ்விதம் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள சாம் இராஜேந்திரன், அங்கு ஒவ்வொரு நாளும் அரங்கேறும் அவலங்களை எடுத்துரைத்துள்ளார்.

“வானூர்தி மற்றும் எறிகணை வீச்சால் உடல் சிதறிப் பலியாகும் மக்களின் உடல்களை உரப்பைகளில் (பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படும் இராசயன உரம் கொண்டிருந்த பைகள்) அள்ளியெடுக்கும் அந்த நெஞ்சைப் பிழியும் கோரக்காட்சிகளை எப்படி மறப்பது? தன் தகப்பனின் சிதறிய உடலை ஒரு பையில் அள்ளியெடுத்த 16 வயது மகனின் மனநிலையை எப்படி எழுதுவது?” என்று கேட்டுள்ளார்.

முல்லைத் தீவுப் பகுதியில் உள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது நடந்த எறிகணை வீச்சில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், அதைப் போன்று இருமடங்கு மக்கள் காயமுற்றனர் என்றும் கூறியுள்ளார்.

“தொண்டு நிறுவனங்களோ, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளோ இங்கு இல்லை. அதே சமயம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் அரசாங்கம் வெளியேற்றிவிட்டது. இங்கு மக்கள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். அதுவும் கர்ப்பிணித் தாய்மார்களும் குழந்தைகளும் சிறுவர்களும் மிகவும் கோரமான முறையில் கொல்லப்படுவதை வார்த்தைகளால் விளக்கவே முடியாதுள்ளது. மன நிலை பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் பெண்களையும் உடல் வலிமை குறைந்தவர்களையுமே அதிகம் காணக்கூடியதாகவுள்ளது. ஐயோ கடவுளே என்று எழும் கூக்குரல்கள் எறிகணைச் சத்தத்தையும் மிஞ்சி கேட்டவண்ணம் உள்ளது” என்று வன்னி நிலவரத்தை கூறியுள்ளார் சாம் இராஜேந்திரன்.

“இராணுவம் என்றதும் கலங்கி பயந்து நடுங்குகின்றனர். கண்களில் காணும் விடுதலைப் புலிப் போராளிகளிடம் அந்தக் கொலைகார இராணுவத்திடம் இருந்து எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மக்கள் பரிதவித்துக் கேட்கின்றனர்.

அந்தளவிற்கு பயந்து கலங்கிய மரண பயத்துடன் உள்ளார்கள். அதிலும் கொத்துக்குக்குண்டு தாக்குதல்களிலிருந்து நாம் எப்படித் தப்புவது? எமது குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது? என்று அங்கலாய்த்து விழி பிதுங்கிப்போன நிலையில் காணப்படுகின்றனர்.

இவற்றை எல்லாம் நாம் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து கொண்டு நேரடியாகவே பார்க்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

சாவின் விளிம்பில் உள்ளனர்:

“பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மக்கள் குறுகிய நிலப்பரப்பிற்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு எறிகணை மற்றும் சுகாதார சீர்கேட்டினால் உண்டான நோயாலும், பட்டினயாலும் மக்கள் செத்துக்கொண்டே இருக்கின்றனர். போரின் வலிமையையும், வலியையும் தாங்க் முடியாமல் தவிக்கின்றனர். போர் நிறுத்தம், சமாதானம், பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் எதிர்பார்த்த வண்ணம் மக்கள் சாவின் விளிம்பில் உள்ளனர்”என்று சாம் இராஜேந்திரன் கூறியுள்ளார்.

செயல்பட வைப்பது யார்?

,சிறிலங்கா அரசோ சகல கதவுகளையும் இழுத்து மூடியுள்ளது.
தமிழ் மக்கள் அதனைத் திறக்கும் பலமான கரங்களாக இந்திய மத்திய அரசையும், அமெரிக்காவையும், ஜக்கிய நாடுகள் சபையையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த கரங்களை செயற்பட வைப்பது யார்?

இதனைச் செயற்பட வைக்கக்கூடியவர்களாக இறைவனால் இந்த பூமியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்தையே நாம் முன்மொழிக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.