பிரபாகரன் குடும்பத்தினர் இலங்கையைவிட்டு வெளியேறினர்

கொழும்பு: வன்னி பகுதியில் இலங்கை ராணுவம் விரைவாக முன்னேறி வருவதை அடுத்து விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் கடல் வழியாக வெளியேறிவிட்டதாக இலங்கை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கையின் இனவெறி ராணுவம் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. விடுதலை புலிகள் வசம் 73 சதுர கிமீ., நிலம் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. இதில் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் உயிருக்கு பயந்து தஞ்சமடைந்துள்ளனர்.

சமீபத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளுடன் பிரபாகரன் எடுத்து கொண்ட படம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இதன்மூலம் பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும், அவருக்கு போரில் படுகாயம் ஏற்பட்டதென்றும் இலங்கை ராணுவம் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகளின் குட்டு வெளிபட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தாக்குதல் நடத்த சென்ற இடத்தில் இலங்கை ராணுவத்திடம் பிடிபட்ட கரும்புலி ஒருவர் சில முக்கிய தகவல்களை கொடுத்துள்ளதாக இலங்கை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அந்த பத்திரிகை செய்தியில்,

விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, இரண்டாவது மகன் பாலச்சந்திரன், மகள் தூவரகர்ணம் ஆகியோர் கடல் மார்க்கமாக வெளியேறிவிட்டனர்.

ஆனால், பிரபாகரனும் அவரது மூத்த மகன் சார்லஸ் அந்தோணியும் முல்லைத்தீவில் ராணுவத்துக்கு எதிராக போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சிங்கள ராணுவத்திடம் பிடிபட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்கள் இலங்கையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்லும் வரை விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போர் புரிவார்கள் என செய்தி வெளியிட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.