இந்தியாவை பகடைக்காயாக பயன்படுத்தும் சிங்கள தேசியவாதம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு மாத்திரம் இந்தியாவை பயன்படுத்த வேண்டும். பௌத்த நாடான சீனாதான் பௌத்தர்களான சிறிலங்கா மக்களின் பொருளாதார, கலாசார வளர்ச்சிக்கு ஏற்புடையது. இந்தியா சிங்கள மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையை உண்டு பண்ணும். எனவே போர் முடிந்ததும் இந்தியாவை கைவிட வேண்டும்”

ஈழத் தமிழர்களை உள்ளடக்கிய தமிழீழ விடுதலை புலிகளின் நடைமுறை அரசுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் வெற்றிபெறும் வகையில் சகல வழிகளிலும் உதவியளித்து வரும் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டிய அவசியம் தொடர்பில் சிங்கள மக்களை சிந்திக்கத்தூண்டும் கருத்தரங்குகள், கூட்டங்கள் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினால் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேவேளையில் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என்றும் எனவே கொழும்பில் உள்ள அந்த நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அக்கருத்தரங்குகள் கூட்டங்களில் விளக்கமளிக்கப்படுகின்றன.

இவ்வாறான கருத்தரங்குகள், கூட்டங்களை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் சிங்கள மாவட்டங்களான கண்டி, குருநாகல், பொலநறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் இந்த மாவட்டங்களை அண்மித்த சிங்கள கிராமங்களில் மேற்குலக நாடுகளை எதிர்ப்பது குறித்த கருத்துக்கள் விதைக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இவ்வாறான கருத்தரங்குகள் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

சிங்கள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் அனைவரும் அவ்வாறான கருத்தரங்குகளில் கலந்து கொள்கின்றனர்.

கொழும்பில் 10.02.09 சிங்கள தேசியவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

புறநகர்ப் பகுதியான களனி பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்குலக நாடுகள் விடுதலை புலிகளின் தமிழீழ கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சிங்கள பேராசிரியர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தியாவும் சீனாவும் கீரியும் பாம்பும்போல இருக்கின்றனர். ஆனால் சிறிலங்கா படைகளுக்கு உதவி அளிப்பதில் முண்டியடிக்கின்றனர். அது அவர்களுக்கு இடையேயான போட்டியாக இருந்தாலும் அதனை சிறிலங்கா அரசாங்கம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் சிங்கள மொழியியல் போராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் போரில் முழுமையான வெற்றியடைந்ததும் இந்தியாவிடம் இருந்து பெறுகின்ற சகல உதவிகளையும் மகிந்த அரசாங்கம் நிறுத்த வேண்டியது அவசியம், ஏனெனில் இந்திய – சிறிலங்கா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் வற்புறுத்துவார்கள் என்றும் அந்த பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில் சீனாவிடம் இருந்து தொடர்ச்சியாக உதவிகளைப் பெற வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை சிறிலங்கா படையினர் முழுமையாக வெற்றி கொண்டதும் இந்தியாவின் உதவிகளும் இராணுவ ஆலோசனைகளும் தேவையில்லை என்றும் விமல் வீரவன்ச கூறினார்.

இந்தியாவுடன் தந்திரோபாயமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எடுத்துக் கூறியுள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (10.02.09) பிரித்தானிய தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் பதாகைகள் காணப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிங்கள கடும்போக்காளர்கள் அனைவரும் மேற்குலக நாடுகளுக்கான தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தமது வாயால் உச்சரித்து உரத்த சத்தமாக முழக்கமிட்டனர்.

சீனாவின் உறவை வளர்த்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை விமல் வீரவன்ச தலைமையிலான ‘தேசிய சுதந்திர முன்னணி’ வற்புறுத்தி வருகின்றது. அதற்கு சோமவன்ச அமரசிங்க தலைமயிலான ஜே.வி.பியும் ஆதரவு வழங்கி வருகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு மாத்திரம் இந்தியாவை பயன்படுத்த வேண்டும். பௌத்த நாடான சீனாதான் பௌத்தர்களான சிறிலங்கா மக்களின் பொருளாதார, கலாசார வளர்ச்சிக்கு ஏற்புடையது.

இந்தியா சிங்கள மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையை உண்டு பண்ணும். எனவே போர் முடிந்ததும் இந்தியாவை கைவிடவேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் ஹந்தும் நெத்தி அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

இதேவேளையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.துரைரட்ணசிங்கம், மகிந்த அரசாங்கம் மாத்திரமல்ல ஜே.ஆர் ஜெயவர்த்தன காலத்தில் இருந்து இந்தியாவை சிறிலங்கா அரசாங்கம் பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றது என்றார்.

இந்த நிலைமையை இந்திய அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார். இந்தியாவின் உண்மையான நேச சக்திகள் ஈழத் தமிழர்கள்தான் ஆனால் இந்தியா அன்று தொட்டு சிங்கள அரசையே நம்புகின்றது எனவும் கூறி அவர் வேதனைப்பட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கும் சிங்கள தேசம் அதே இந்தியாவினால் ஈழத் தமிழர்களுக்காக முன்வைக்கும் குறைந்தபட்ச அரசியல் தீர்வைக்கூட ஏற்காது என்று வலியுறுத்தி கூறினார்.

எவ்வாறாயினும் தற்போது இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் அளவுக்கு சிங்கள தேசம் முன்னிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

இப்படி நன்றி தெரிவிப்பதால் சிங்கள தேசம் எப்போதும் இந்தியாவின் நண்பன் என்ற தோற்றப்பாட்டை காண்பித்துக்கொண்டு மறுகரத்தால் சீனாவுக்கு சிறிலங்காவில் இருந்து தேவையான சகலதையும் கையளித்து தங்கள் நாட்டை வளப்படுத்தலாம் என்ற நம்பிக்கைதான் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

எது எப்படியோ சிறிலங்காவின் இந்த இரட்டை முகத்தையும் அசிங்கமான செயற்பாட்டையும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் என்று அடையாளம் கண்டு கொள்வார்களோ அன்றுதான் சகலருக்கும் விடிவு பிறக்கும் என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

இந்த உலகில் இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு. ஆனால், விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்பதற்காக மிகவும் சிறிய நாடான சிறிலங்காவின் குறுகிய சின்னத்தனமான இராஜதந்திர செயற்பாட்டுக்குள் அமுங்கிப்போய் விட்டதே என்று கூறி கவலைப்பட்டார் அரசியல் ஆய்வாளர் கலையரசன்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.