படைத்தரப்பு இழப்புக்கள் குறித்து அரசாங்கம் தகவல்களை வெளியிடுவதில்லை: எதிர்க்கட்சித் தலைவர்

வன்னியில் இடம்பெற்று வரும் உக்கிர மோதல்களில் படைவீரர்களது இழப்பு விபரங்களை வெளியிடாமல் அரசாங்கம் திட்டமிட்டு மறைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்பிரச்சினை காரணமாக பொருளாதார நலிவு, இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வின்மை போன்ற பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரம்பரிய யுத்த முனைப்புக்களில் இலங்கை அரசாங்கப் படையினர் வெற்றி பெற்றுள்ளதாக கருதப்பட்டபோதிலும், அண்மைய யுத்த முன்நகர்வுகளில் படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய இழப்புக்கள் பற்றி தகவல் வெளியிட்டால் அது படைவீரர்களது மனோதிடத்தை பாதிக்கும் என அரசாங்கம் கற்பிக்கும் நியாயம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலங்களை பொதியிடும் உறைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக இரகசியத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமைகள் உண்மையில் படைவீரர்களது அரிய தியாகத்தையே வெளிப்படுத்தி நிற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரம்பரிய ரீதியான யுத்தத்தில் படையினர் வெற்றி பெற்ற போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக முல்லைத்தீவு காடுகளிலிருந்து விரட்டியடிக்க நியாயமான கால அவகாசம் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேச மக்களது ஒத்துழைப்பு கிடைக்கப் பெறும் வரையில் விடுதலைப் புலிகளின் கெரில்லா தாக்குதல்களை முற்றாக தோற்கடிப்பது கடினமான இலக்காகவே அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் சிவிலியன்களது நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதன் மூலமே நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.