தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் வான் புலிகள் குண்டுகளை வீசினர்: கொழும்பு இணையத் தளம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வான் புலிகள் நடத்திய தாக்குதலின் போது வானூர்திகள் குண்டுகளை வீசிய பின்னர் இலக்கு நோக்கி தற்கொலை தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத் தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வான்படை தலைமையகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதலை நடத்திய வானூர்தியும் கட்டுநாயக்கா வான்படை தளத்தின் மீது தாக்குதலை நடத்திய வானூர்தியும் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்னர் தலா இரண்டு குண்டுகளை வீசியுள்ளன.

வான்படை தலைமையகம் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய வானூர்தி குண்டுகளை வீசிவிட்டு வீழ்ந்து வெடித்துள்ளது.
ஆனால், கட்டுநாயக்க பகுதியில் தாக்குதல் நடத்திய வானூர்தி குண்டுகளை வீசிவிட்டு இலக்கை நோக்க தாழ்வாக பறந்த வேளை படையினரின் பீரங்கி சூட்டுக்கு இலக்காகி உள்ளது.

இதனிடையே, இத்தாக்குதலில் வான்படை தலைமையகம் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளதுடன், அதன் அதிர்வலைகளே இறைவரி திணைக்களத்திற்கும் அதிக சேதங்களை விளைவித்துள்ளது.

வான்படை தலைமையகம் மீதான தாக்குதலில் இரு உயரதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் பலர் கடுமையாக காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.