அம்பாறை கொலைகள்: தமிழீழ விடுதலைப்புலிகள் மறுப்பு வெளியிட்டுள்ளனர்

அம்பாறை இங்கினியாகலை ரத்மல்கம பிரதேசத்தில் 21 சிங்கள விவசாயிகள் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்துள்ளமைக்கு தாமே காரணம் என படைத்தரப்பு சுமத்திய குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதி நகுலன் இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச ரீதியில் வெறுப்பை ஏற்படுத்தும் பிரசாரமே இந்தப் படுகொலைகளின் பழியை எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களப்படையினர் சிங்கள மக்களை ஆயுததாரிகளாக்கி வருகின்ற நிலையில் அவர்களுக்கு இடையில் உருவாகியுள்ள குழுவினரே இந்தக்கொலைகளுக்கு காரணமாக இருக்கலாம் என நகுலன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருகிராமங்களுக்கிடையில் விவசாய நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே இப்படுகொலைகளுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூவரும் அடங்குவதாக அந்தப் படைக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர கூறியிருக்கின்றார்.

அந்தப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து கூட்டாக தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தப்பி வந்த கிராமவாசிகளின் தகவல்களின் படி பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அங்கு வந்த ஆயுதம் தரித்த நபர்கள் குடிசைகளுக்கு தீ வைத்து பின்னர் துப்பாக்கிப் பிரயோகமும் செய்ததாக அறிய வருகின்றது.

சம்பவத்தையடுத்து கிராமவாசிகள் தற்போது இடம் பெயர்ந்து அங்குள்ள பாடசாலைக் கட்டிடமொன்றில் தற்காலிகமாக தங்கியிருக்கின்றனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.