வட இலங்கை மோதல்களில் 36 புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும், அம்பலவன்பொக்கணை பகுதியிலும் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சகம், 36 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், விடுதலைப்புலிகளின் 11 சடலங்களை படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.

அத்துடன், புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும், ஏற்கனவே படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள விசுமடு, அக்கராயன்குளம், முறிகண்டி, கொக்காவில், வன்னிவிளான்குளம் போன்ற பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளில் பல்வேறு ஆயுதத் தளபாடங்களும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், யாழ்குடாநாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதிகளாகிய வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கும், தாளையடி பகுதிக்கும் விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்த 23 சிவிலியன்கள் படகுகள் மூலம் தப்பி வந்துள்ளதாகவும் இவர்கள் கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

Source & Thanks : .bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.