சென்னை உயர்நீதிமன்ற வன்முறை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கண்டனம்

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வன்முறை மிக மிக துரதிர்ஷ்டவசமானது. கண்டனத்துக்குரியது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் கருத்து தெரிவிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதல் மிக மிக துரதிர்ஷ்டவசமானது. அதை மட்டும்தான் நான் சொல்ல முடியும்.

அங்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. எனவே எப்படி இந்த மோதல் மூண்டது என்பது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது.

இந்த சம்பவம் கவலைக்குரியது, கண்டனத்துக்குரியது என்றார் கே.ஜி.பாலகிருஷ்ணன்.

வக்கீல்களுக்கு வேண்டுகோள்

இதற்கிடையே, சென்னை உயர்நீதி்மன்ற வக்கீல்கள் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐகோர்ட்டிலும், மற்ற கோர்ட்டுகளிலும் மிகப் பெரிய அளவில் வழக்கு தேக்கம் உள்ளது. இந்த நிலையில் வக்கீல்கள் ஸ்டிரைக்கால் மீண்டும் வழக்குகள் தேக்கம் அதிகமாகி வருகிறது.

எனவே வக்கீல்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கோரியுள்ளார்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.