வெள்ளை மாளிகை முன்பு தமிழர்கள் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்

வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பு 7000 தமிழர்கள் கூடி பிரமாண் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

வன்னியில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டித்து வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி நேற்று இந்த பிரமாண்ட ஆர்ப்பாட்டம் அங்கு நடந்தது. இதில் வட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தமிழர்கள் 7000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்காசியாவுக்கான பிரிவு அதிகாரி டயான் கெல்லியிடம், தமிழர்கள் பிரதிநிதிகள் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.

இதுகுறித்து போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவரான டாக்டர் ஜெயராஜா கூறுகையில், இலங்கை அரசு நிகழ்த்தி வரும் இனப்படுகொலையை பகிரங்கமாக கண்டிக்கிறோம்.

இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும், சர்வதேச மனித உதவி அமைப்புகளையும், பத்திரிக்கையாளர்களையும் போர் பாதித்த பகுதிகளுக்கு செல்ல உதவ வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை செயல்படுத்த அரசியல், பொருளாதார ரீதியிலும், பிற வழிகளிலும் இலங்கை அரசை அமெரிக்க அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.

இலங்கையின் அண்டை நாடுகளுடன் அமெரிக்காவுக்கு உள்ள நல்லுறவைப் பயன்படுத்தி, அவர்கள் அனைவரும் இணைந்து இலங்கையில், போர்நிறுத்தத்தை அமல்படுத்த உதவுமாறஉ கேட்டுக் கொள்ள வேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு ஏற்பட உதவ வேண்டும் என்று அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்து மனு அளித்தோம் என்றார்.

கூட்டமே வராத சிங்களர்களின் போராட்டம்

இதே பகுதியில், அவசரம் அவசரமாக சிங்களர்கள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அக்கூட்டத்திற்கு 100 பேருக்கும் குறைவான அளவிலேயே கூட்டம் வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவில் பேரணி

இதேபோல, தென் ஆப்பிரிக்காவின் பீட்டர்மாரிஸ்பர்க் நகரில், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழர்களும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் பேரணி நடத்தினர்.

தமிழ் மக்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றக் கோரியும், கட்டுண்டு கிடக்கும் அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்துமாறும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணியை நீதிக்கும் சமாதானத்திற்குமான ஒருமைப்பாட்டுக் குழு, தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பாலஸ்தீன ஆதரவு அமைப்பு, அருட்பா கழகம், தென்னாபிரிக்க இஸ்லாமிய ஒன்றியம், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை ஏற்பாடு செய்திருந்தன.

பீட்டர்மாரிஸ்பர்க் நகரின் முக்கியச் சாலை வழியாக சென்ற பேரணி, சுதந்திர சதுக்கத்தில் முடிவடைந்தது. அங்கு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் இலங்கையில், தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு எதிராகவும், தமிழ் மக்கள் படுகொலைக்கு இந்தியா துணை போவதாகவும், அனைத்துலகம் பாராமுகமாக இருப்பதாகவும் முழக்கமிட்டனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் சார்பாக குவாசூலு நேட்டால் மாகாண முதல்வர் சிபு என்டெபெல, மாகாண சட்டசபை தலைவர் வில்லிஸ் எம்சுனுவிடம் மனு அளித்தார்.

பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.கா.ஈழவேந்தன் உரையாற்றுகையில், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இரட்டை வேடம் கலைந்து கொண்டிருப்பதாகவும் அதன் நம்பகத்தன்மை கலைந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தென்னாபிரிக்க மேயர் யூசுப் பாம்ஜீ, தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பாரி பிள்ளை, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் பிரிவின் மாகாண துணைத் தலைவர் எம்ரண்டேனி டுலுங்வானா, செல்வி நாயுடு மற்றும் செல்வி சோலானி எம்கிசெ ஆகியோரும் உரையாற்றினர்.

ஜெனீவாவில் மாபெரும் பேரணி

இதேபோல ஜெனீவா நகரி்ல் ஐ.நா. அலுவலகம் முன்பு 15 ஆயிரத்திற்கும் மேலான தமிழர்கள் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும், கண்டனப் பேரணியையும் நடத்தினர்.

ஜெனீவா தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பூங்காவில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை பணியகத்தை நோக்கி ஐரோப்பா வாழ் தமிழர்கள் பேரணியாக நடந்து சென்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பு ஈழத் தமிழர் முருகதாசன் தீக்குளித்து இறந்த இடத்தில் மேடை அமைக்கப்பட்டு அவரின் படம் வைத்து மலர்வணக்கத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பின்னர் தமிழர்கள் முருகதாசன் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

சிறிலங்கா அரசின் சிங்கக் கொடியை கால்களால் மிதித்தும், எரித்தும், அதிபர் ராஜபக்சேவின் உருவப்பொம்மையை செருப்புளால் அடித்தும் வெறுப்பை வெளிக்காட்டினர்.

ஐரோப்பிய நாடுகளில் பேசப்படும் பல மொழிகளில் தமிழ் இளைஞர்கள் பேசினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஜெயானந்தமூர்த்தியும் பேசினார்.

பின்னர் பிரநிதிகள் சார்பில் ஐ.நா. அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.