வன்னியில் உள்ள மக்களை வெளியேற்ற இணைத் தலைமை நாடுகள் தலைமையில் முயற்சி

இணைத் தலைமை நாடுகள் தலைமையில் வன்னியில் உள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

மனிதாபிமான நடவடிக்கைகள் என்ற போர்வையில் வன்னியில் உள்ள தமிழ் மக்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கு அமெரிக்கா தலைமையில் இணைத்தலைமை நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இது தொடர்பாக ஆராய்வதற்காக அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை மையத்தை சேர்ந்த அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர். இந்த நடவடிக்கையில் அமெரிக்கா கடற்படை மற்றும் வான்படை கலங்களை பயன்படுத்த உள்ளன.

புதுக்குடியிருப்பின் கரையோரத்தில் உள்ள பாதுகாப்பான பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி ஆழமான கடல் பகுதிகளுக்கு கொண்டு சென்று பின்னர் முகாம்களுக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு இணைத் தலைமை கூட்டமைப்பைச் சேர்ந்த ஒவ்வொரு நாடுகளுடனும் தனித்தனியாக பேச்சில் ஈடுபட்டு வருவதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கைக்காக கூட்டு மனிதாபிமான நடவடிக்கை படையணி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாகவும், எனினும் அதற்கான நாள் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இது தொடர்பாக அரசு பல நாடுகளிடம் பேச்சுக்களை நடத்தி வருவதுடன், இந்தியா தமிழ் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற முன்வந்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.