நேற்று தீக்குளித்த தி.மு.க. தொண்டர் மரணம்

தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி நேற்று நடத்திய மனித சங்கிலி போராட்டத்தின் போது தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்கட்சியின் தொண்டர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

கிண்டி ஹல்டா பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்ற போது அக்கட்சியின் தொண்டரான சிவப்பிரகாசம் நேற்று சனிக்கிழமை மாலை 4:00 மணியளவில் தலையில் மண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடனே அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அக்கட்சியின் தொண்டர்கள் அணைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அவரது உடலில் 80 வீதம் தீக்காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அவர் ஆபத்தான நிலையில் இருந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று இரவு 11:00 மணியளவில் உயிரிழந்தார்.

சிவப்பிரகாசம் உடலம் பிரேத பரிசோதனைக்குப் பின் இன்று காலை 9:00 மணியளவில் அவரது மகன் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து நோயாளர் காவு ஊர்தியின் மூலம் தரமணியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் மலர்வணக்கம் செலுத்தினர்.

இன்று இறுதி நிகழ்வு நடைபெறவுள்ளதாக தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.