ஆஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவின் பெருவீதிகளில் தமிழ் இளையோர் அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையில் தமிழீழப்பகுதியில் இலங்கை இனவெறி அரசால் இடம் பெற்றுக்கொன்டிருக்கும் இன அழிப்பை, இலங்கை அரசின் உண்மை முகத்தை உலகத்திற்கு உணர்த்தவும், நித்தம் சாகும் எம் ஈழத்து உறவுகளைக் காப்பாற்றவும், சுதந்திர ஈழம் (FREE EELAM) என்ற கோரிக்கையை முன்வைத்து சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு அதிகமான மக்கள் கலந்துகொண்ட மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நேற்று வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவின் பெருவீதிகளில் எழுச்சியுடன் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

காலை 10 மணியளவில் கன்பராவில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்னால் கூடிய மக்கள், நோர்வே தமிழ்மக்களை காப்பாற்று, நோர்வே இரட்டை வேடம் போடாதே, சிறிலங்கா கொலைகளை நிறுத்து, தமிழ்மக்கள் கேட்பது தமிழீழம், எங்கள் தலைவன் பிரபாகரன், சூரிய தலைவன் பிரபாகரன் போன்ற கோ~ங்களை எழுப்பிய வண்ணம் கொட்டொலிகளையும் எழுப்பியபடி போராட்டம் இடம் பெற்றது. தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் நோர்வே தூதரக பிரதிநிதிகளை சந்தித்து பேசினர்.

அதன்பின்னர், ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி, யப்பான், இந்திய தூதரகங்களுக்கு முன்னால் பேரணிகள் நடைபெற்று அமெரிக்க தூதரகத்த்துக்கு முன்பாக நிறைவுபெற்றது. ஒவ்வொரு தூதரக பிரதிநிதிகளையும் சந்தித்த இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் அவர்களுக்கு தாயகத்தில் தமிழ்மக்கள் எதிர்நோக்கியுள்ள மனிதப்பேரவலத்தை தெளிவாக எடுத்துக்கூறியதுடன், அங்கு தமிழ்மக்கள் தினம் தினம் அனுபவிக்கின்ற கொடுரங்கள் தொடர்புடைய நிழல்படங்களையும் தூதரக பிரதிநிதிகளிடம் காண்பித்தனர். அதன் பின்னர் தூதரக அதிகாரிகளினுடன் ஆன சந்திப்பில் இடம்பெற்ற விடயங்களை பேரணியில் கலந்துகொண்ட மக்களுடனும் இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டனர்.

ஜேர்மன், அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் பேரணியில் கலந்துகொண்ட மக்களின் முன்பாக வந்து பேசினர். மிகக்கொடுரமான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துவரும் தமிழ்மக்களை எண்ணும்போது கவலையளிப்பதாகவும் அவர்களுக்காக இங்கு இவ்வாறான ஒரு மாபெரும் பேரணியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் இங்கு தமக்கு வழங்கப்பட்ட மனுவை தமது அரசிடம் சேர்ப்பிப்பதற்கு உடனடியான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர்.

இந்திய தூதரகம் மனுவைப் பெற்றுக் கொண்டு எந்ததொரு உறுதி மொழியும் வழங்காமல், தாங்கள் இந்திய மத்திய அரசிடம் அறிவிப்பதாகக் கூறியது. இந்திய தூதரகத்தின் பின் அமெரிக்க தூதரகம் முன்பாக நகர்ந்த பேரணியினர் அமெரிக்க தூதரகத்திடமும் மனுவை கையளித்தனர். பின்பு பேரணிக்கு முன்பாக வந்து அமெரிக்க தூதுவர் இலங்கையில் ஒரு இன அழிப்பு நடந்து வருகிறது என்பதை தான் அறிந்திருப்பதாகவும் அதற்கு தன்னாலான நடவடிக்கைகளை தான் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் இளையோர் அமைப்பின் பிரிதிநிதிகள் கூறுகையில் தாம் சந்தித்த தூதரக பிரிதிநிதிகளில் அமெரிக்க தூதரக பிரதிநிதியுடனான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக இருந்ததாக தெரிவித்தனர்.

இந்திய தூதரகத்திற்கு முன்பாக பேரணி நடைபெற்றபோது, மக்களது கோ~ங்களிலும் அவற்றை எழுப்பிய சத்தத்திலும் வித்தியாசம் காணப்பட்டது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் இந்திய அரசே தமிழ்மக்களை காப்பாற்று, சோனியா தமிழர்களை கொல்லாதே, காந்தி தேசமே, கொலைகளை நிறுத்து என்று கோ~மெழுப்பினர். அப்போது அங்கு ஆஸ்திரேலிய தொலைகாட்சிகளின் நிருபர்கள் வந்து நிகழ்வினை பதிவுசெய்துகொண்டனர்.

அமெரிக்க தூதரகத்துடன் பேரணி நிறைவுபெற்றதும், இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் இருவர் மாத்திரம் கன்பராவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தக்கு சென்று அதன் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். அவர்கள் அங்கு ஆசிய பசுவிக் பகுதிகளின் செயலாளர், Richard towle ஜ சந்தித்து, ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை இரானுவத்தின் கொடூரமான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் போராட்டத்தின் நியாயத்தை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறியபொழுது Richard towle அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் மனவருத்தத்தையும் தெரிவித்ததோடு எம் மக்களின் உரிமை குரலின் நோக்கம் நியாயமானதென்றும் அதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்றும், இன்று கையளிக்கப்பட்ட மனுவை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பேன் என்றும் உறுதிமொழி கூறினனர். அத்தோடு ஐ.நா சபையின் பிரிவுகளில் ஒன்றான UNHCR செயலாளரை சந்தித்து தமிழ் இளையோர் தமிழீழத்தில் தமிழர் நிலை பற்றி விளக்கமளித்தனர். கலந்துறையாடலின் பின்னர் அகதிகள் தொடர்வாக தாம் தமது தலைமைப்பீடத்திற்கு தெரிவிப்பதாக UNHCR செயலாளர் தெரிவித்தார்.
2500க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய வாழ் தமிழர்கள் இணைந்து கொண்ட இந்த பேரெழுச்சி நிகழ்வு மிகவும் எழுச்சிமிக்கதாக  அமைந்ததாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

நன்றி: அதிர்வு இணையத்தளம் 

Leave a Reply

Your email address will not be published.