‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (22.02.09) செய்திகள்

எமக்கு பிரியமான தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகளைப் பேசும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, நாம் ஆதரிக்கும் சர்வ வல்லமையுள்ள இறைவனின் திருப்பெயரில் நாம் வன்னியில் இருந்து கொண்டு இந்த அவசர அறைகூவலை விடுக்கின்றோம் என வன்னி அருட் பணியாளர்கள் சார்பாக அருட்திரு .சாம் இராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அருட் பணியாளர்கள் சார்பாக அருட்திரு .சாம் இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னியில் வாழும் எங்கள் வாழ்வு கேள்விக்குறியாகி, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே நாம் உங்களுக்கோர் அவசர அறைகூவலை விடுக்கின்றோம்.
நிம்மதியும் நிரந்தர வாழ்வும் தொலைந்து போன நிலையில் மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு இறுதி மூச்சைப் பிடித்தபடியே அனைத்துலக கிறிஸ்தவ சமூகத்திற்கு இந்த அவசர அறைகூவலை விடுக்கின்றோம்.
கொடிய போர் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகள் விடுதலைப் புலிகளாகவே இருக்க, விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் சிறிலங்கா அரசால் தமிழ்மக்கள் நாள்தோறும் மிகவும் மோசமான முறையில் கண்கொண்டு பார்க்க முடியாத வகையில் கொன்று குவிக்கப்படுக்கின்றனர். காயப்படுத்தப்படுகின்றனர்.
வானூர்தி மற்றும் எறிகணை வீச்சால் உடல் சிதறிப் பலியாகும் மக்களின் உடல்களை உரப்பைகளில் (பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படும் இராசயன உரம் கொண்டிருந்த பைகள்) அள்ளியெடுக்கும் அந்த நெஞ்சைப் பிழியும் கோரக்காட்சிகளை எப்படி மறப்பது.
தன் தகப்பனின் சிதறிய உடலை ஒரு பையில் அள்ளியெடுத்த 16 வயது மகனின் மனநிலையை எப்படி எழுதுவது?
உடல் சிதறிப் பலியானவர்களையோ அல்லது காயமடைந்தவர்களையோ அந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தவோ, காயப்பட்டவர்களுக்கு உதவுவதோ மிகவும் கடினமான விடயமே.
ஏனெனில் அந்த இடங்களில் 1,000 தொடக்கம் 6,000 வரையான எறிகணைகள் நாள்தோறும் அரச படைகளால் எறியப்பட்ட வண்ணமே இருக்கும்.
மழை போல் விழும் இந்த எறிகணைகளின் மத்தியில் மீட்புப் பணிகளை எவ்விதம் செய்ய முடியும்.
இவை அரசால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் நடைபெறுகின்றன.
எனவே இப்பிரதேசம் மக்களால் கொலை வலயம் என்றே அழைக்கப்படுகின்றது.

இந்த பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த உடையார்கட்டு மருத்துவமனை மீது இடம்பெற்ற எறிகணை வீச்சால் மருவத்துமனை சேதமானதுடன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
அந்த தொகையின் இரு மடங்கு மக்கள் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து எழுந்த கேள்விக்குப் பதில் தந்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுகையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனை இருக்கும் போது மக்கள் ஏன் உடையார்கட்டு மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்றார்.
இரண்டாம் நாள் வானூர்தி மற்றும் எறிகணை வீச்சிற்கு புதுக்குடியிருப்பு மருத்துவமனை இலக்கானது. அங்கும் காயமுற்ற நிலையில் இருந்த மக்கள் கொல்லப்பட்டார்கள். சிகிச்சைப் பெற வந்திருந்த மக்கள் பலர் காயப்படுத்தப்பட்டனர். மருத்துவமனையும் முற்று முழுதாகச் செயல் இழந்தது.
இப்போது மோதல் நடைபெறும் இடங்களில் மருத்துவமனை என்று ஒன்றில்லை.
பாடசாலை மற்றும் மர நிழல்களில் சிறியளவிலான சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
இருப்பினும் மருத்துவ அதிகாரியோ மருந்துகள் எதுவும் இல்லை இதனால் காயப்பட்டவர்கள் இறக்கும் சந்தர்ப்பங்களே அதிகம் உள்ளன என்கிறார்.
அதே சமயம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் அரசாங்கம் வெளியேற்றி விட்டது.
தொண்டு நிறுவனங்களோ, ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளோ இங்கு இல்லை.
இங்கு மக்கள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். காயப்படுத்தப்படுகின்றனர். அதிலும் கர்ப்பிணித் தாய்மார்களும் குழந்தைகளும் சிறுவர்களும் மிகவும் கோரமான முறையில் கொல்லப்படுவதை வார்த்தைகளால் விளக்கவே முடியாதுள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் பெண்களையும் உடல் வலிமை குறைந்தவர்களையுமே அதிகம் காணக்கூடியதாக உள்ளது.
ஜயோ கடவுளே என்று எழும் கூக்குரல்கள் எறிகணைச் சத்தத்தையும் மிஞ்சி கேட்டவண்ணமே உள்ளது.
இராணுவம் என்றதும் கலங்கி பயந்து நடுங்குகின்றனர். கண்களில் காணும் விடுதலைப் புலிப் போராளிகளிடம் அந்தக் கொலைகார இராணுவத்திடம் இருந்து எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மக்கள் பரிதவித்துக் கேட்கின்றனர்.
அந்தளவிற்கு பயந்து கலங்கிய மரண பயத்துடன் உள்ளார்கள். அதிலும் கொத்துக்குக்குண்டு தாக்குதல்களிலிருந்து நாம் எப்படித் தப்புவது? எமது குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது? என்று அங்கலாய்த்து விழி பிதுங்கிப்போன நிலையில் காணப்படுகின்றனர்.
இவற்றை எல்லாம் நாம் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து கொண்டு நேரடியாகவே பார்க்கின்றோம்.
மருத்துவ உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றி மக்கள் நாள் தோறும் ஓடிக் கொண்டே இருக்கின்றனர்.
நாள்தோறும் நிமிடம் தோறும் இந்த மக்கள் துன்புறுகின்றனர். இரவுபகலாக உறங்கமுடியாமல் தவிக்கின்றனர்.
பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மக்கள் குறுகிய நிலப்பரப்பிற்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு எறிகணை மற்றும் சுகாதார சீர்கேட்டினால் உண்டான நோயாலும் பட்டினியாலும் மக்கள் செத்துக்கொண்டே இருக்கின்றனர்.

போரின் வலிமையையும் வலியையும் தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் எதிர்பார்த்த வண்ணம் மக்கள் சாவின் விளிம்பில் உள்ளனர்.
சிறிலங்கா அரசோ சகல கதவுகளையும் இழுத்து மூடியுள்ளது.
தமிழ் மக்கள் அதனைத் திறக்கும் பலமான கரங்களாக இந்திய மத்திய அரசையும், அமெரிக்காவையும், ஜக்கிய நாடுகள் சபையையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த கரங்களை செயற்பட வைப்பது யார்?
இதனைச் செயற்பட வைக்கக்கூடியவர்களாக இறைவனால் இந்த பூமியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்தையே நாம் முன்மொழிக்கின்றோம்.
அதுவே உண்மையும் கூட.
இந்த நேரத்தில் சிறிஸ்தவர்கள் யாவரும் கிறிஸ்தவ திருமறையில் உள்ள எஸ்தர் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
எஸ்தரைப் போல் உடன் விரைந்து செயற்பட வேண்டும்.
இலங்கைத்தீவில் சிங்களம் மற்றும் தமிழ் எனும் இரு தேசிய இனங்கள் வாழ்கின்றனர்.
இதில் சிங்கள தேசிய இனம் தனது வாழ்வியல் உரிமைகளையும் இறைமைகளையும் தன்னகத்தே கொண்டு வாழ்கின்ற அதே சமயம், தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வியல் உரிமைகளையும், இறைமைகளையும் மறுத்து இன்று அந்த இனத்தை அதன் மண்ணிலே ஏதிலிகளாக்கி கொன்று குவித்து வருகின்றது.
இதற்குப் பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்ற பெயரையும் கொடுத்துள்ளது.
ஆனால் இதனை அனைத்துலக சமாதான விரும்பிகளான மெய்யான கிறிஸ்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதே சமயம் ஜெபிக்கின்றோம், மன்றாடுகின்றோம், வேண்டுதல் செய்கின்றோம் என்று மட்டும் கூறி விட்டு இருந்திட முடியாது.
தன் தலை போகும் என்று தெரிந்திருந்தும் நீதிக்கு முகம் கொடுத்து யோவான் ஸ்நானகனைப் போல் எழுந்து செயற்பட வேண்டும்.
ஆமான் என்பவனின் சதியால் முழு யூத இனமுமே அழிக்கப்படும் சூழ்நிலை உருவானபோது வெறுமனே உபவாசம்ஜெபம் என்று மட்டும் இருந்து விடாமல் தன் இனத்துக்காகவே தன் உயிரை பணயம் வைத்து அரசனிடம் சென்றவர் எஸ்தர்.
அன்று யூத இனம் காப்பாற்றப்பட்டது.
இறைவன் பாத்துக்கொள்வார், செய்வார் என்பது மட்டும் உண்மையல்ல.
ஆக்கபூர்வமாக எழுந்து செயற்பட வேண்டும் என்பதும் உண்மைதான்.
இந்த நிலையில் கிறிஸ்தவ சமூகத்தின் அசைவே தமிழ் இனத்தின் இருப்பை உறுதி செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.
வன்னியில் நடைபெறும் இந்த பேரவலம் நிறுத்தப்பட சிங்கள மற்றும் இந்திய முதலான அனைத்துலக கிறிஸ்தவ சமூகம் எழுந்து செயற்பட வேண்டும்.
உண்மையில் கிறிஸ்தவர்களுக்கு தேசப்பற்று இருக்க வேண்டும். ஆயினும் அவர்கள் தேச வெறிக்கும், இனமொழி பாகுபாடுகளுக்கும், அப்பாற்ப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்ட இனத்திற்கு கைகொடுக்க வேண்டியவர்கள். சுயநலமற்றவர்கள் தன்னைப்போல் பிறரை அன்பு செய்பவர்கள்.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரு கால கட்டத்தில் ஓடுக்கப்பட்டனர். கொன்று குவிக்கப்பட்டனர்.
இப்போது தலை நிமிர்ந்துள்ளனர்.
இதனை நாம் மறக்கக்கூடாது.
எனவே சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே நீங்கள் பௌத்த சிங்கள அரசிற்கு அச்சப்பட வேண்டாம்.
நீதிக்கு முகம் கொடுங்கள். சிங்கள தேசிய இனம் போல் தமிழ்த் தேசிய இனமும் எல்லா வாழ்வியல் உரிமைகளுடனும் இந்த தீவில் வாழ நீதிக்காக போராடுங்கள்.

அனைத்துலகம் எங்கும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழத் தமிழர்கள் என்னும் பெயரில் குரல் கொடுக்கின்றீர்கள் என்பதை நாம் அறிவோம்.
ஆயினும் நீங்கள் உங்கள் அனைத்து வல்லமையையும் பயன்படுத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
அனைத்துலக கிறிஸ்தவ சமூகம் என்ற பெயரில் எழுந்து செயற்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
சகல கிறிஸ்தவ மொழிபேசும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளையும் ஒன்றிணைத்து செயற்படும்படியாக நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்திய கிறிஸ்தவ சமூகத்தையும் கேட்டுக்கொள்கின்றோம்.
நோர்வேயின் நோர்வே பப்டிஸ்ற் யூனியனில் உள்ள இறை பணியாளர் அந்தோனிப்பிள்ளை, ஸ்ரலின் செபஸ்ரியன் அவர்களும் இதற்கான ஒழுங்குகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்வதோடு, இவ்விதம் இறங்கிச் செயற்படும்படியாக அனைத்துலக கிறிஸ்தவ சமூகத்தையும் கேட்டுக்கொள்கின்றோம்.
போர்கள் ஓய வேண்டும், மனிதப் பேரவலம் மறைய வேண்டும், உணவு, மருத்துவ மற்றும் அடிப்படைத் தேவைகள் யாவும் சந்தித்து கொடுக்கப்பட வேண்டும்.
நடைமுறைச் சாத்தியமற்ற மாயையான இந்தப் போர் ஓய வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்.
ஏனெனில் விடுதலைப் புலிகளை ஒழிக்க இன்னமும் குறுகிய நாட்களும் நிலமுமே உண்டு என அரசு கூறிக்கொண்டு கொடிய போரை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
எனவேதான் மேற்படி விடயம் நடைமுறைச் சாத்தியமற்றது என்கின்றோம்.
உண்மையில் அழிந்து கொண்டிருப்பது அப்பாவிப் பொதுமக்கள்தான் என்பதை உணர்ந்து ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டியுள்ளது.
அந்நிய தேசத்தில் இருந்த யூதர்கள் ஆமானின் சதியால் முற்று முழுதான அழிவின் விளிம்பில் இருந்தனர்.
இந்த இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றும்படியாக அந்த தேச அரண்மனையில் இருந்த யூதப் பெண்ணான எஸ்தருக்கு மெர்த்தேகாய் சொன்ன வார்த்தைகளை நினைவூட்டுகின்றோம்.
(நீ ராஜாவின் அரண்மனையில் இருக்கின்றதனால் மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க நீ தப்புவாய் என்று உன் மனதில் நினைவு கொள்ளாதே. நீ இந்தக்காலத்திலே மௌனமாக இருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும். அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாய் இருக்கும்படிக்கு உனக்கு இராஐ மேன்மை கிடைத்திருக்கலாமே யாருக்குத் தெரியும்)

நிம்மதியாக வாழ்ந்து சுதந்திரக்காற்றைச் சுவாசிப்போர் மரணத்தின் பிடியில், சாவின் விழிம்பில் நின்று அவலப்படும் சகோதர சகோதரிகளைக் காக்க எழாதிருக்க முடியுமோ?
அனைத்துலக கிறிஸ்தவ சமூகமே உங்கள் உறவுகள் சகோதர சகோதரிகள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
உடன் விரைந்து செயற்படுங்கள்.
இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்களாக என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட வேண்டும் என மெக்சிக்கோ எடுத்து வரும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறிலங்காவின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஐக்கி நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என மெக்சிக்கோ மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா குரல் கொடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் சிறிலங்கா தொடர்பான விவாதம் கொண்டு வரப்பட வேண்டும் என தமது நாடு கோரிக்கை மேற்கொள்ளும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியா தூதுவர் ஜோன் சாவெர் தெரிவித்துள்ளார்.
இது தற்போது சிறிலங்காவில் தங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான நியூயோர்க் திரும்பிய பின்னர் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், சிறிலங்காவில் இருந்து திரும்பியதும், ஜோன் கோல்ம்ஸ் கொலம்பியாவுக்கு செல்வதனால் பாதுகாப்புச் சபையில் அவர் கலந்து கொள்வது சாத்தியமற்றது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா தொடர்பான விவாதங்கள் சூடுபிடிக்கலாம் என்பதை பிரித்தானியாவின் இந்த நகர்வு எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா தொடர்பாக கடுமையான அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் நாளை திங்கட்கிழமை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறிலங்கா தொடர்பான விவாதங்களை நாளை மறுநாள் அமெரிக்காவின் வெளிவிவகார செனட் சபை விவாதிக்க உள்ளதுடன் இரு வாரங்களில் அமெரிக்கா அரசின் வருடாந்த மனித உரிமை அறிக்கை வெளிவர உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்பதனை வலியுறுத்தும் வகையில் ஐரோப்பிய நாடுகளது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நாளை தினம் தீர்மானமொன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் அதிகளவான பொதுமக்கள் இழப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யுத்த வலயத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக இந்த கோரிக்கையை முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.

மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட்டு, ஆயுதங்களை களைமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரியவருகிறது. நீண்டகாலமாக தொடரும் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு ஒருபோதும் யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாதென ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புதிய தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கட்சித் தலைமைப் பதவியை வகித்து வந்த கருணா அம்மானது தலைமைப் பதவி மற்றும் கட்சி உறுப்புரிமை ஆகியவற்றை கட்சியின் மத்திய செயற்குழு கடந்த 17ம் திகதி உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் என கருணா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் விளக்கமளிக்க வழங்கப்பட்டிருந்த காலத்தில் கருணா விளக்கமளிக்கத் தவறியதனால் கட்சியின் மத்திய செயற்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் அரசாங்கம் அமைத்துள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் சிறிலங்கா படையினரால் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறி தமக்கு நேர்ந்த அவலங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்சுக்கு விபரித்தனர். ஆனால், அதனை மொழிபெயர்த்த மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தமிழீழ விடுதலைப் புலிகள் தான் தமது பிள்ளைகளை கடத்தியும் சுட்டும் கொன்றதாக திரிபுபடுத்தி கூறினார் என்று முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவ்வாறு வேண்டும் என்றே திரிபுபடுத்தி மொழிபெயர்த்த போது அதனை அவதானித்த அருகில் நின்ற அதிகாரிகள் பலர் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்ததாகவும் ஆங்கிலம் தெரிந்த மக்கள் பலர் சரியாக சொல்ல முற்பட்டபோது அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அதிகாரிகள் அதனை தடுத்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறைப்பாட்டை பாதிக்கப்பட்ட மக்கள் பல சிரமங்களின் மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டுள்ளனர்.
அதேவேளை, வவுனியாவில் உள்ள இடம்பெர்ந்த மக்களை பார்வையிடச் சென்ற ஜோன் ஹோல்ம்ஸ் தன்னுடன் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பாளரை அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாட்டை கொழுப்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் ஏன் செய்யவில்லை என்றும் வவுனியா செயலக அதிகாரிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, ஜோன் ஹோல்ம்சை நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் குறித்த மொழிபெயர்ப்பு திரிபுபடுத்தப்பட்டதை எடுத்துக்கூறி அதற்கு ஆட்சேபனை தெரிவித்ததாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிழையான மொழிபெயர்ப்பை யார் செய்தார்கள் என்று பெயர் குறிப்பிடாமல் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் ஹோல்ம்சிடம் முறையிட்டதாகவும் அதனை தங்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர் என்றும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் தலைநகர் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு வான் புலிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து படையினர் வானத்தை நோக்கி மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் பாடசாலை சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

வான் புலிகளின் வானூர்திகளை நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களில் பல பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இராஜகிரிய பகுதியில் சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு பீரங்கி குண்டு ஒன்று வீழந்ததனால் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வீட்டின் முற்றத்தில் நின்றிருந்த சிறுமியின் கழுத்துப் பகுதியில் பீரங்கி குண்டு ஏற்படுத்திய கடுமையான காயத்தினை தொடர்ந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

படையினரின் இந்த தாக்குதல்களில் சிக்கி நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து யுத்த சூழ்நிலை காரணமாக காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் என மேலும் ஒரு தொகுதியினர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 398 பேர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெண்கள் ,குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் என காயமடைந்தவர்களும் நோய் வாயப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும் என சுமார் 420 பேர் நேற்று முன் தினம் வெள்ளிக் கிழமை இரவு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வைத்தியசாலை தகவல்களின் படி இது வரை 1610 பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.இவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.441 பேர் சிகிச்சை முடிந்து வவனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

693 பேர் திருகோணமலை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அதேவேளை ஏனையோர் பொலன்னறுவை ,கந்தளாய் ,தம்பலகாமம் ,கண்டி மற்றும்; கொழும்பு ஆகிய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்
!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் யுத்த சூழ்நிலை காரணமாக காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானதாக இல்லைஎன மட்டக்களப்புதிருகோணமலை ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் 178 பேர் வைத்தியசாலையில் எற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை.

திருகோணமலை வைத்தியசாலையில் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதை தவிர்க்கும் வகையில் இவர்கள் மாற்றப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பு போன்ற தமிழ் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இவர்களை மாற்றுவது தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார்.

“பொலன்னறுவை வைத்தியசாலையில் வைத்தியர்கள்,தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட சகலரும் பெரும்பான்மை இனத்தவரின் மொழியான சிங்களம் பேசுபவர்கள்.சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரை தமிழ் மொழி பேசுபவர்கள்.இதனால் மொழி ரீதியான பிரச்சினைகளுக்க முகம்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் சென்று பார்வையிடுவது என்றால் பாதுகாப்பு கெடுபிடிகள் ,போக்குவரத்து கெடுபிடிகள் ,அங்கு தங்கியிருப்பவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.அது மட்டமல்ல அங்கு சேவையாற்றுபவர்கள் சேவை மனப்பான்மையுடன் இவர்களுக்கு சேவையாற்றினாலும் மக்களையும் விடுதலைப் புலிகளாக கருதுபவர்களும் உண்டு.

ஏற்கனவே உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இவர்கள் அங்கிருந்து அறிமுகமில்லாத இடமொன்றிற்கு மாற்றப்பட்டிருப்பதானது அவர்களிடையே தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்தும் .

இந் நிலையில் தனக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடையே ஒரு வித அச்சமும் பீதியும் இருப்பதை அறியக் கூடியதாக உள்ளதுஎன்றும் கூறினார்
!!!!!!!!!!!!!!
கனடாவில் இருந்து சமாதான தூதுக்குழு ஒன்று எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதம் அளவில் இலங்கை வரவுள்ளதாக கனடாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ள மேற்படி சமாதானத் தூதுக்குழு இலங்கை அரசு தரப்புடன் அபிவிருத்தி பற்றிப் பேசும் அதேவேளையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்த உள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் அரசியல் தீர்வு இல்லாது முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளால் முழுமையான பலன்களை அடைந்து விட முடியாது. மீண்டும் பிரச்சினைகள் தலை தூக்குமாயின் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்திப் பணிகளும் பயனற்றுப் போய்விடும் என்பதாலேயே அபிவிருத்தியுடன் அரசியல் தீர்வின் தேவை குறித்தும் இலங்கை வரவுள்ள கனடா அமைதித் தூதுக் குழு இலங்கைத் தரப்புடன் பேச உள்ளதாக அறிய முடிகின்றது.

கனாடாவில் இருந்து அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஒரு தூதுக்குழு தமது இலங்கை அனுபவங்களையும், இலங்கை அரசின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள், எதிர்பார்ப்புகள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்க உள்ளதாகவும் இதனையடுத்தே கனடா அரசாங்கம் சமாதானத் தூதுக்குழுவை அனுப்பவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட கனேடிய தூதுக் குழுவில் ஐந்து அல்லது ஆறுபேர் அளவில் இடம்பெற்றதாக அறிய முடிகின்றது. இந்தத் தூதுக்குழுவில் கனடாவில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களும் இடம்பெற்றிருந்தனர்.

மேற்படி தூதுக்குழுவின் இலங்கை விஜயத்தின் போது வடக்கு கிழக்கில் குறிப்பாக வடக்கில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்திப் பணிகள், நிதி முதலீடுகள் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பலவிடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வருவதால் வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது பற்றியே பெரும்பாலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கனேடிய தூதுக்குழு இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, அமைச்சர்கள் என அரச தரப்பின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்துப்பேசியுள்ளது.

மேற்படி சந்திப்புக்கு அப்பால் சுதந்திரமாக இக்குழு வெளியாருடன் தொடர்பு கொள்ளவோ, பேசவோ, சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் தூதுக்குழுவில் இடம்பெற்ற தமிழ்ப்பிரதிநிதிகள் தமது உறவினர்கள், மற்றும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளக்கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறித்து கனடா அரசாங்கத்தின் கவனத்திற்கு இலங்கை வந்த தூதுக்குழுவினர் கொண்டு வந்ததாகவும் அறிய முடிகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து தடுப்பு முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சுற்றிவர ஆயுதப்படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் எந்நேரமும் மக்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றார்கள் எனஐ.நா.மனித உரிமை விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஜோன் ஹோம்ஸை தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!
அம்பாறை மாவட்டம் ரத்மல்கக எல கிராமத்தில் நேற்று மாலை ஆயததாரிகளினால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லபப்ட்வர்களின் எண்ணிக்கை 15 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆகவும் உயர்ந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மேற் கொள்ளப்பட்டதேடுதலின் போது கொல்லப்பட்ட மேலும் 3 கிராமவாசிகளின் சடலங்கள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கொல்லப்பட்டவர்களில் 4 பெண்களும் 5 குழந்தைகளும் அடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முன்பு குடிசைகளுக்கு தீ வைத்ததாகவும்,சீருடையணிந்து காணப்பட்டதாகவும் கிராமவாசிகளின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை காவல்துறை பிரிவு மாங்கேணி இராணுவ காவலரணில் இளைஞர் ஒருவர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புச்சாங்கேணியிலிருந்து மாங்கேணி நோக்கி சென்ற இளைஞன் மாங்கேணி பகுதியில் வைத்து இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனினும் தப்பியோடியுள்ளார்.
நேற்று முந்தினம் காலையில் மீண்டும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டள்ளார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர் 27 அகையுடைய புண்ணியமூர்த்தி நிஷாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளர்.
இது தொடர்பாக காவல்துறை மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!
அம்பாறை கல்முனையில் அரிசி ஆலையில் தொழில் புரியும் 10 தமிழர்கள் கைது
அம்பாறை கல்முனை பகுதியிலுள்ள முஸ்ஸிங்களுக்கு சொந்தமான அரிசி ஆலையில் தொழில் புரியும் மட்டக்களப்பைச் சேர்ந்த 10 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 16ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி, மற்றும் திகிலிவெட்டை பகுதியிலிருந்து கல்முனையில் உள்ள முஸ்ஸிங்களுக்கு சொந்தமான அரிசி ஆலைக்கு வேலை சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நேற்று முந்தினம் இவர்களில் 7 பேர் மாத்திரம் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர். ஏனைய மூவரின் நிலை என்ன என்பது குறித்து எதுவும் தெரியவரவில்லை. என அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கைது தொடர்பாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!
இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சு மூலமான தீர்வுக்கு முன்வர வேண்டும்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இருதரப்பினரிடமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அரசியல் தீர்வு ஒன்றே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும். இரு தரப்பினரும் மேசையில் அமர்ந்து பேசித்தீர்வைக்காண வேண்டும் என்று அவர் வற்புறுத்தியுள்ளார்.
சமாதானத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லையேல் தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும்தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கும் என்று அவர் கூறினார்.
இலங்கைத் தமிழ் மக்கள் மோதல்களில் கொல்லப்படுவதையிட்டு இந்தியா கரிசனையாக இருக்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு சீர்குலைந்துள்ளது.
அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையை இந்தியா கேட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கொழும்பு மற்றும் கட்டுநாயக்கா மீது விடுதலைப்புலிகளின் வான்தாக்குதல் இடம்பெற்றதற்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என செய்தி ஏஜென்சி ஒன்று குறிப்பிட்டுத் தெரிவித்தது.
!!!!!!!!!!!!!!!!!
கொழும்பிலும் கட்டுநாயக்கா பகுதியிலும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதலை நடத்தவந்த விடுதலைப்புலிகளின் இரு விமானங்களும் தலா 215 கிலோ வெடிமருந்தை நிரப்பி வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவருவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு கோட்டையில் விமானப்படைத்தலைமையகம் முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டிடம் மீது வான்புலிகளின் விமானமொன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதேநேரம் மற்றொரு விமானம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தச் சென்ற போது படையினரின் தாக்குதலுக்கிலக்காகி வீழ்ந்துள்ளது.
இந்த விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பின்புறத்தில் சதுப்பு நிலப்பகுதியில் வீழ்ந்துள்ளது. இந்த விமானத்தின் சிதைவுகள் இரவோடிரவாக சேகரிக்கப்பட்டு அரச இரசாயனப் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நடைபெற்ற ஆரம்ப விசாரணையின் போது, அந்த விமானத்தின் உள் பகுதியில் 215 கிலோ வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விமானம் தாக்குதலை நடத்தும் போது உச்சகட்ட சேதங்களை ஏற்படுத்துவதற்காக வெடிமருந்துகள் பிளாஸ்டிக் குழாய்களினுள்ளும் இரும்புக் குழாய்களினுள்ளும் வைக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த விமானம் சதுப்பு நிலத்தில் வீழ்ந்ததால் அவை வெடிக்கவில்லையென விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த விமானத்தின் விமானியின் உடல் ஓரளவே சேதமடைந்துள்ளது. இவர் இரு சயனைட் குப்பிகளை அணிந்திருந்தார். இவரது இருக்கையில் மிகவும் சக்தி மிக்கசி4′ ரக வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்தன. இதை விட விமானத்தினுள் வெடிகுண்டுகளும் இருந்துள்ளன.
இந்த விமானத்தைப் போன்றே மற்றைய விமானமும் 215 கிலோசி4′ ரக வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு குண்டுகளுடன் வந்திருக்கலாமென விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.
தாக்குதலுக்கு வந்தவர்கள் இரவு நேரத்தில் இருளில் பார்க்கக் கூடிய இரவுப் பார்வைக் கண்ணாடிகளை (நைற் விஷன்) அணிந்திருக்கவில்லை. மாறாக, தங்களுக்கு வழிகாட்ட உதவியாக சிறிய ரகபொக்கற் ரோச் லைற்களுடனேயே வந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவர்கள் இடங்களைக் கண்டறிவதற்கு பயன்படும் கையடக்க ஜி.பி.எஸ் (எடூணிஞச்டூ கணிண்டிtடிணிணடிணஞ் குதூண்tஞுட்) கருவியையும் கொண்டு வந்துள்ளதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்விரு விமானங்களையும் தற்கொலைக் குண்டுதாரி விமானிகளே இயக்கிய வந்துள்ளதனர். இதில் ஒரு விமானம் விமானப்படைத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்த முற்பட்டுள்ளது. எனினும் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மிகக் கடுமையாகத் தாக்குதல்களை நடத்தியதால் அந்த விமானம் இலக்கை மாற்றி பின்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் மோதியுள்ளது. இதனால் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.
இந்த விமானம் கட்டிடத்தின் 12 ஆவது, 13 ஆவது மாடியில் மோதிச் சிதறியுள்ளது. இதனால் அவற்றுக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத் தின் மீது மோதிய விமானத்தின் சிதைவுகள் அனைத்தும் 12 ஆவது மாடியில் கிடந்தன. அந்தப் பகுதியிலும் அடுத்தடுத்த மாடிகளிலும் விமானியின் உடற்பாகங்கள் சிதைந்து போய் சிதறிக்கிடந்தன.
இந்தத் தாக்குதலால் 12 ஆவது மாடியிலிருந்த மரத்தளபாடங்கள் மற்றும் வருமானவரிக் கோவைகள் அனைத்தும் முற்றாக எரிந்து போயுள்ளன. நேற்றுக் காலையும் இந்தப் பகுதி எரிந்துகொண்டிருந்தது.
இவ்விரு விமானங்களும் செக் குடியரசுத் தயாரிப்பான சிலின்143 ரகத்தைச் சேர்ந்தவை. இவ்வாறான சிறியராக விமானங்களில் இரவு நேரத்தில் அதற்குரிய கருவிகளின்றி மிகவும் தாழ்வாகப் பறப்பதென்பது மிகவும் கடினமானவையென்றும் இந்த விமானிகள் நிச்சயமாக வெளிநாட்டில் மிகத் தீவிரமான பயிற்சிகளைப்பெற்றிருக்க வேண்டுமென வர்த்தக விமானத்தின் சிரேஷ்ட விமானியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலையடுத்து நேற்று இப்பகுதியூடான போக்குவரத்துகள் நடைபெறவில்லை. இந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டு இறைவரித்திணைக்கள இடிபாடுகள் அகற்றப்பட்டன.
இங்கு நடைபெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 51 பேரில் 41 பேரே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் அவசர சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை வந்துள்ள .நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வெள்ளியன்றிரவு பலமணி நேரத்தைமெழுகுதிரிவெளிச்சத்தில் கழித்த அனுபவத்தை நேற்று ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
கொழும்பு கோட்டைப் பகுதியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஜோன் ஹோம்ஸ் தங்கியிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு விடுதலைப்புலிகள் கொழும்பில் மேற்கொண்ட விமானத்தாக்குதலின்போது தலைநகரில் மின்சாரம் சுமார் ஒருமணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எதுவும் செய்யமுடியாத நிலையில் தங்கியிருக்க நேர்ந்ததாக அவர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இது தனக்கு இலங்கையில் கிட்டிய ஒரு புது அனுபவம் எனவும் இதனை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேசமயம், விடுதலைப்புலிகளின் இந்த விமானத்தாக்குதலை கடுமையாகக் கண்டித்த ஜோன் ஹோம்ஸ், இது போன்ற நடவடிக்கைகள் அனுமதிக்க முடியாதவை எனக் கூறினார்.
இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட காயமடைந்தவர்களுக்கும் பலியானவர்களின் குடும்பத்தவருக்கும் தனது கவலையையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் வெளியிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காணி விநியோக நடவடிக்கைகளின் போது படைவீரர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆயுத படையினர் மற்றும் பொலிஸார் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு முன்னுரிமை அளித்து இனிவரும் காலங்களில் காணி விநியோகம் மேற்கொள்ளப்படும் என காணி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஒரு அங்குலம் காணியேனும் தமக்கென உரிமையில்லாத படைவீரர்கள் நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டை கட்டிக்காக்க போராடி வருவதாகவும், அதற்கு நன்றி பாராட்டும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரி, பொலன்னறுவ, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, கேகாலை, ரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் படைவீரர்களுக்கு காணி விநியோகம் செய்யப்படவுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 15 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்திற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. நிவாரணங்களை வழங்கும் போர்வையில் வன்னி நிலவரங்கள் குறித்து ஆராய்வதற்காக குறித்த குழுவினரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பி வைக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்ய குறித்த குழுவினர் வீஸா அனுமதிப்பத்திரங்களை கோரியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழு பிரதிநிதிகளின் விஜயம் பெரும் தடையாக அமையக் கூடும் என பாதுகாப்பு படையினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இந்த முறைப்பாட்டுக்கும் குறித்த பிரதிநிதிகள் குழுவின் இலங்கை விஜயத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என அரசாங்கத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கவில்லை என அரசாங்கத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!
இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஆளும் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதிப்புக்கு உட்படுத்தும் வகையிலான இராணுத் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என சந்திரிக்கா இந்தியாவில் தெரிவித்துள்ளார். இராணுவப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும், இடம்பெயர நேரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை பாதிப்புக்கு உட்படுத்தி அடையும் இராணுவ வெற்றிகள் விரும்பத் தக்கக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில்தான் இராணுவ நடவடிக்கைகள் துல்லியமாக திட்டமிடப்பட்டதாகவும்ää அதன் தொடர்ச்சியே இன்றைய அரசாங்கத்தின் வெற்றி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பின் புறநகர் பகுதியின் பாதுக்க பிரதேசத்தின் உள்ள தமிழர்கள் வாழும் அயர் தோட்டப்பகுதிக்குள் நேற்றுமுன்தினம் புகுந்த ஆயுதங்கள் தாங்கிய சிலர் நடத்திய தாக்குதலில் ஒரு தமிழ் பொதுமகன் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் கொழும்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்தே இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து குறித்த தோட்டப்பகுதிக்கு காவல் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப்பிரதிநிதி தயான் ஜயதிலக்க விரைவில் நாட்டுக்கு திருப்பியழைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் இரண்டு: வருடக்கால பதவிகாலம் முடிந்தநிலையிலேயே நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தயான் ஜயதிலக்க, இந்த இரண்டு வருடக்காலத்தில் இலங்கையின் அரசியல் நிலைப்பாடு மற்றும் யுத்தம் தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் சர்வதேசத்திலும் உள்நாட்டில் அரசாங்க மட்டத்திலும் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தார்.
!!!!!!!!!!!!!!
INDIA
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தீக்குளித்த திமுக பிரமுகர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் பரிதாபமாக உயிரிழந்தார். .

திமுக இளைஞர் அணி சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மனித சங்கிலியில் பங்கேற்ற கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவபிரகாசம், கிண்டி ஹால்டா சந்திப்பு அருகே புதிதாக கட்டப்படும் ஒரு ஓட்டல் வளாகத்துக்குள் சென்று பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றிக்கொண்டார்.

இலங்கையில் உடனே போரை நிறுத்து என்று கத்திக்கொண்டே அவர் தனது உடலில் தீவைத்துக் கொண்டார். உடனே அங்கிருந்த போலீசார் மற்றும் திமுகவினர் அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை அமைச்சர் மு..ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி சிவபிரகாசம் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்ட பிறகு இன்று காலை அவரது மகன் சிவகுமாரிடம் ஒப்படைக்கப் பட்டது. இன்று பிற்பகல் தரமணி அருகே உள்ள கானகம் மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடி யிருப்பைச் சேர்ந்தவர் சிவபிரகாசம் (60). மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பின்னர் தனியார் டிராவல்ஸ் ஒன்றிலும் இவர் டிரைவராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனோரமா என்ற மனைவியும், செல்வி, தேவி, சுஜாதா, சாந்தி என்ற 4 மகள்களும்,
சிவகுமார் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

திமுகவில் முன்னாள் பகுதிக் குழு உறுப்பினராக 10 ஆண்டுகள் பதவி வகித்த சிவபிரகாசம், முன்னாள் மேயர் சிட்டிபாபு நினைவு மன்றச் செயலாளராக இருந்து வந்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வியாழனன்று காவல்துறையினர் தடியடி நடத்துவதற்கு உத்தரவிட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் பதவி விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொதுநல வழக்காக தாமாகவே முன்வந்து எடுத்துக் கொண்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாயா இல்லத்தில் நேற்று நடத்தியது.

காவல்துறையினரின் தடியடியில் நீதிமன்றங்கள் பலத்த சேதம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், யாரிடம் அனுமதி பெற்று போலீசார் நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களை பார்க்கும்போது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும், இருப்பினும் இதற்கு காரணமானவர்கள் யார் யார் என்ற விவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகே இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உயர்நீதிமன்ற வன்முறைச் சம்பங்களுக்காக திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியிருக்கிறார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இதேபோன்ற நிகழ்வு முந்தைய அஇஅதிமுக ஆட்சியில்ஏற்பட்டபோதும் ஆட்சிக்கலைப்பு கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் தங்களது எல்லையை மீறக்கூடாது என கேட்டுக் கொண்ட தங்கபாலு, அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குறியது என்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
செ‌ன்னை உய‌ர்நீதிமன்றத்திலே நடைபெற்ற சம்பவங்கள் குறித்த சி.பி.. விசாரணை முறைப்படி நடைபெறும் எ‌ன்று‌ம் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று‌ம் முதலமைச்சர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்
!!!!!!!!!!!!!!!
மும்பைத் தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற விடயத்தில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதால், இந்தியாபாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்திற்கு நேற்று வருகை தந்த இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் பாலின் நிவில்லி ஜோன்சுடனான சந்திப்பின் போது மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கிலானி உறுதியளித்துள்ளார்.

எனினும், மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இருதரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தையை நிறுத்துவது, பயங்கரவாதிகளின் குறிக்கோளுக்கு அடிபணிவது போன்ற நிலையையே ஏற்படுத்தும் என இச்சந்திப்புக்குப் பின்னர் பாகிஸ்தான் அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

காஷ்மீர் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் படியான தீர்வைப் பெறுவதற்காக இந்தியா விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தையை துவக்கும் என தாம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் கிலானி கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!world
world
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவிலே குடும்பங்கள் பெறுகிற வருமானம் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகரிப்பதை உறுதிசெய்யும் விதமான நடவடிக்கைகளை அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
வரிக் குறைப்பு செய்யப்படும் என அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒபாமா வழங்கியிருந்த வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு சராசரிக் குடும்பத்தின் மாத வருமானத்தில் குறைந்தபட்சம் அறுபத்தைந்து டாலர்களாவது இந்த திட்டங்களால் அதிரிக்கும் என்று அதிபர் ஒபாமா கூறினார்.
அமெரிக்காவின் சரித்திரத்திலேயே மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிக்குறைப்பு நடவடிக்கை இதுதான் என்று அவர் கூறினார்.
முந்தைய நிர்வாகத்திடம் இருந்து தாங்கள் சுவீகரித்திருக்கும் லட்சம் கோடி டாலர்கள் அளவிலான நிதிப் பற்றாக்குறையை தனது அரசு எவ்வாறு குறைக்க முயலும் என்பது பற்றிய விபரங்களையும் ஒபாமா வழங்கியுள்ளார்.
நிதி நிலைமை பற்றி விவாதிப்பதற்கான உயர்மட்டக் கூட்டம் ஒன்றை வரும் திங்களன்று கூட்டவுள்ளதாகவும், அவர்களது அறிக்கை செவ்வாயன்று வெளியாகும் என்றும், பின்னர் வியாழனன்று சிக்கனமான நேர்மையான என்று தான் வருணித்த ஓர் வரவுசெலவுத் திட்டம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!
சீனாவுக்குப் பயணம் செய்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் அவர்கள் உலகப் பொருளாதார நெருக்கடி, பருவ நிலை மாற்றப் பிரச்சினை மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்னும் எதிர்கால அணுகுமுறைகள் குறித்த மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பேச்சுக்களை நடத்த அமெரிக்காவும் சீனாவும் கொள்கைகள் அளவில் உடன்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இந்த உடன்பாடு பெய்ஜிங் நகரத்தில் அவர் அதிபர் ஹூ ஜிந்தாவோ அவர்களுடனும், பிரதமர் வென் ஜிஆபோ அவர்களுடனும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்டது.
இதற்கு முன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யாங் ஜெய்ச்சி அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டுகள் என்பவற்றை மட்டுப்படுத்தி உள்நாட்டு வர்த்தகத்தையும் தொழில்களையும் பாதுகாக்கும் போக்குடைய கொள்கைகளைத் தம் நாடுகள் நிராகரிக்கின்றன என்பதில் உடன்பட்டனர்.
இருநாடுகளின் படைத் தரப்புகளுக்கு இடையேயான பேச்சுக்கள் மத்திய மட்டத்தில் ஆரம்பமாகும் என திருமதி. கிளின்டன் அவர்கள் கூறினார்.
தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்றதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையான ராணுவப் பரிமாற்றங்களைச் சீனா கடந்த ஆண்டு முதல் நிறுத்திக்கொண்டத
!!!!!!!!!!!!!!!!
சுவத் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானப் படைகளுடன் மோதிவந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான அரசு ஒரு நிரந்தப் போர்நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளது என்று மூத்த பாகிஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
சுவத் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மலகந்த் பிரதேசத்திற்கான ஆளுநர் சாயித் மொஹமத் ஜாவெத் அவர்கள் இருதரப்பும் இப்படி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன என்று தெரிவித்ததோடு மேலதிக விபரங்களை வழங்கவில்லை.
இப்பகுதியில் ஷரியா சட்டம் அமல்படுத்தப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் இணங்கியதை அடுத்து தீவிரவாதிகள் கடந்த ஞாயிறன்று முதல் பத்து நாள் போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
ஷரியா சட்டம் அமல் படுத்தப்பட வேண்டும் என்பது அங்கே இயங்கும் தீவிரவாதிகளுக்குத் தலைமை தாங்கும் தலிபான் மதகுருவின் கோரிக்கை.
அங்கு அமைதி நிலைநாட்டப்பட்ட பிறகுதான் அங்கே ஷரியா சட்டம் அமல்படுத்தப்படுவதற்கான ஆணையில் கைச்சாத்திடுவேன் என்று பாகிஸ்தான அதிபர் சர்தாரி கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!
இராக்கின் அபு கிரைப் சிறைச்சாலை பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இராக்கியக் கைதிகளை அமெரிக்கத் துருப்பினர் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக பிரபலம் அடைந்த சிறை இது.
இச்சிறை தற்போது இராக்கிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனை மற்றவற்றுக்கு உதாரணமாகத் திகழ்கிற ஒரு சிறையாக திருத்தியமைத்துள்ளதாகவும், மனிதாபிமான உதவி நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்வையிட இச்சிறை இடம்தரும் என்றும் இராக்கிய அரசு கூறுகிறது.
சிறைக்கைதிகள் தம்மைப் பார்க்க வருபவர்களைச் சந்திப்பதற்கான இடவசதி, மருத்துவ உதவி மையம் ஆகியவை இச்சிறையில் புதிதாக இடம்பெற்றுள்ளன.
கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையிலும், புதுப்பிக்கப்பட்ட ஒரு பகுதியில் சுமார் முன்னூறு கைதிகள் பரிட்சார்த்த ரீதியாக தங்கவைக்கப்பட்டுள்ளளனர்.
பாக்தாத்தின் முக்கிய சிறையாகசுமார் ஆயிரத்து இருநூறு பேர் வரையிலானவர்களை அடைத்துவைக்கும் வசதிகொண்ட ஒரு சிறையாக இது மாறும்.
!!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.