10 பேர் தீக்குளித்து செத்ததற்கு பதில் என்ன?-சீமான்

நெல்லை & புதுச்சேரி: இலங்கை ராணுவத்தின் முக்கால்வாசிப் பேருக்கு இந்தியாவில்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.

இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் இயக்குநர் சீமான் மீது புதுச்சேரி போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சீமானைக் கைது செய்ய புதுச்சேரி போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவர்கள் பிடியில் சீமான் சிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று நெல்லை வந்த சீமான், அங்கு மாநகர காவல்துறை ஆணையர் மஞ்சுநாதாவை சந்தித்து அவர் முன்பு சரணடைந்தார்.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் அவரை உடனடியாக புதுச்சேரிக்குக் கொண்டு வந்தனர்.

புதுச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பொன்ஜியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் இயக்குநர் சீமானை மார்ச் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இயக்குநர் சீமான் உடனடியாக புதுச்சேரி மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

முன்னதாக நேற்று நெல்லை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சரணடைய வருவதற்கு முன்பு மாவட்ட கோர்ட் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான்.

அப்போது அவர் கூறுகையில்,

நான் தலைமறைவாக இருப்பதாக செய்தி வந்தபோது நெல்லையி்ல் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் பேசினேன். கைது அவசியம் இல்லை. முன்பிணைக்கு முயல்வோம் என்று வக்கீல் கூறியதால் தாமதித்தேன்.

கடலுரில் உயிர் நீத்த தமிழ் அன்பரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு விட்டு சிறை செல்லலாம் என்றிருந்தேன்.

ஆனால், சட்டமன்றத்தில் அமைச்சர் ஆற்காடு வீரசாமி தனிப்படை அமைக்கப்பட்டதாக பேசிய பின், பயந்து ஒளிந்ததை போல் தோற்றத்தை உருவாக்கியதால் நேராக புதுவைக்கு போய் கைதாக எண்ணினேன். நண்பர்கள் ஆர்வத்தால் இங்கு சரண் அடைகிறேன்.

தமிழீழ விவகாரத்தில் தலையிட்டால் அடுத்த நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகும் என்று சொல்லும் அரசு பாலஸ்தீன போரை நிறுத்த சொன்னதே, நேற்று முன்தினம் கூட 2 மிக் ரக விமானங்கள், 60 பீரங்கி எதிர்ப்புகலை அனுப்பியிருக்கிறதே, 75 சதவீத சிங்கள வீரர்களுக்கு இந்தியாவில்தான் அளிக்கப்படுகிறது.

பத்து பேர் தீக்குளித்து செத்ததற்கு பதில் என்ன, ஆறரை கோடி தமிழர்களை மத்திய அரசு மனநோயாளியாக ஆக்கிவிட்டது. முதிர்ந்த பகுத்தறிவின் காரணமாக நான் சாகவில்லை. ஆனால் ஈழத்தில் நடப்பதை எண்ணி பல நாட்களாக, பசி, தூக்கமில்லை.

எத்தனையோ தலைவர்கள் பேசாத உண்மையை நான் பேசி விட்டேன் என்றார் அவர்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.