வக்கீல்களை கைது செய்ய ஐகோர்ட் தடை! போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவு

சென்னை: ஐகோர்ட் வளாகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, வக்கீல்களைக் கைது செய்யக் கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தியிருப்பதாக நீதிபதிகள் கூறினர். “இச்சம்பவம் தொடர்பாக யாரையும் கைது செய்ய மாட்டோம்’ என, ஐகோர்ட்டில் உள்துறைச் செயலரும் உத்தரவாதம் அளித்துள்ளார்.சென்னை ஐகோர்ட் வளாகம் நேற்று முன்தினம் போர்க்களமாக காணப்பட்டது.

போலீசார் – வக்கீல்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்தது. சம்பவத்தில் வக்கீல்கள், போலீசார், பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர்; வாகனங்களும், கோர்ட் கண்ணாடி ஜன்னல்களும் சேதப்படுத்தப்பட்டன; போலீஸ் நிலையமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

நீதிபதிகள் பார்வை: நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பாஷா, ஜெயபால், தனபாலன் ஆகியோர் நேற்று கோர்ட் வளாகத்தைப் பார்வையிட்டனர். தங்கள் குமுறல்களை நீதிபதிகளிடம் வக்கீல்கள் வெளிப்படுத்தினர்.பின், “கோர்ட் வளாகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக வக்கீல்களைக் கைது செய்யக் கூடாது என போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என, வக்கீல்களிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். “வக்கீல்கள் பொறுமையாக இருந்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

நேற்று முன்தினம் இரவு, தற்காலிக தலைமை நீதிபதி முகோபாதயா, நீதிபதிகள் தனபாலன், சந்துரு அடங்கிய “பெஞ்ச்,’ ஒரு பொதுநல மனுவை விசாரித்தது. தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதம்:

* காயமடைந்த சில வக்கீல்கள், சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்யவில்லை.

* முறையான புலன் விசாரணைக்குப் பின், தலைமை நீதிபதிக்குத் தெரிவித்த பின், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

* சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டிருந்தால், அவர்களை உடனடியாக விடுதலை செய்வோம்.

* நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி கைது செய்யப்பட்டவர்கள், சரண்டர் செய்யப்பட வேண்டியவர்களை, ஐகோர்ட்டில் சகஜ நிலை திரும்புவதை உறுதி செய்ய சொந்த ஜாமீனில் விடுவிப்போம்.

* சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் அரசின் செலவில் சிகிச்சை அளிக்கப்படும்.

* சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்துவோம்.

இந்த உத்தரவாதங்களைப் பதிவு செய்த “பெஞ்ச்,’ இதை பின்பற்ற வேண்டும் என்றும், தவறினால், கோர்ட் உத்தரவை மீறியதாகக் கருதப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பொதுநல மனு மீதான விசாரணையை, மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்த “பெஞ்ச்,’ தமிழக அரசும், ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.