ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய இயக்குநர் சீமானுக்கு 15 நாள் சிறை

ஈழத்தமிழர் மீதான படுகொலையை நிறுத்தக்கோரி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் நடாத்திய உண்ணாநிலைப்போராட்டத்தில் உரையாற்றியதற்காக இயக்குநர் சீமானை கைது செய்த புதுவை காவல்துறையினர் இன்று 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.

கடந்த 12ஆம் திகதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக உண்ணாநிலைப்போராட்டம் நடத்தினர். அவர்களை வாழ்த்தி பேசிய இயக்குநர் சீமான் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி காவல்துறை சீமான் மீது வழக்குப்பதிவு செய்தது.

தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி காவலர்கள் செயல்பட்டு வந்தார்கள். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் திகதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்நிலையில் சட்டசபையில், 19ஆம் திகதி காங்கிரசு மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி விரைவில், கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று இயக்குநர் சீமான் தானே முன்வந்து திருநெல்வேலி காவல் ஆணையர் முன் சரண் அடைந்தார்.சீமான் சரண் அடைந்தது குறித்து நெல்லை ஆணையர் மஞ்சுநாதா, புதுச்சேரி வழக்கு சம்பந்தமாக சீமானை கைது செய்திருப்பதாகவும் அவரை புதுச்சேரி காவல் துறையிடம் ஒப்படைக்க விருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் சீமானை காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி காவலர்கள் புறப்பட்டனர்.

இன்று காலை புதுச்சேரி மாவட்ட குற்றவியல் நீதிபதி முன் சீமான் நிறுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சீமான் மீது தேசப் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்த புதுச்சேரி காவலர்கள், இயக்குநர் சீமானை புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.