வான் கரும்புலிகளின் தாக்குதலால் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் மூடப்பட்டது

சிறிலங்காவின் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தின் மீது வான்புலிகள் நேற்று நடத்திய கரும்புலி தாக்குதலையடுத்து, வானூர்தி நிலையம் சில மணி நேரங்கள் மூடப்பட்டது. அத்துடன் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் அனைத்தும் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டன.

வான் புலிகளின் கரும்புலித் தாக்குதலையடுத்து உடனடியாக வானூர்தி நிலைய பணிகள் அனைத்தையும் இடை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டது.

இதனையடுத்து, கட்டுநாயக்காவில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் இந்தியாவிற்கு திசை திருப்பி விடப்பட்டன. குறிப்பிட்ட சில வானூர்தி சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, கரும்புலிகளின் தாக்குதலையடுத்து நேற்று வெள்ளக்கிழமை இரவு 10:30 நிமிடமளவில் ஹொங்ஹொங் நாட்டுக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும் இரவு 12:25 நிமிடமளவில் பாங்கொக் நகருக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும், அதிகாலை 2:20 நிமிடமளவில் சென்னைக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும் இடைநிறுத்தப்பட்டது.

இதனிடையே, உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டிட தொகுதி வான் கரும்புலிகளின் தாக்குதலால் பாரிய சேதத்தை சந்தித்துள்ளதுடன், அதற்கு அருகில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாகவும், கட்டுநாயக்கா வான்படைத்தளம் மூடப்பட்டு அங்கிருந்த வான்படை வானூர்திகள் இரத்மலானை பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 6 பேர் காயமடைந்ததுடன் மொத்தமாக 50 பேர் காயமடைந்ததுடன் இருவர் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கரும்புலித் தாக்குதல்களை நடத்திய புலிகளின் வானூர்திகள் இரண்டும் கொழும்பில் நீண்ட நேரமாக தாழ்வான பறப்பை மேற்கொண்டே தாக்குதல்களை நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.