ஜெனீவாவில் திரண்ட தமிழர்கள் ‘வீரத் தமிழன்’ முருகதாசனுக்கு வணக்கம்

சுவிற்சா்லாந்து ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஒன்றுகூடலில் அணிதிரண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்த ‘வீரத் தமிழன்’ முருகதாசனுக்கு மலர் வணக்கத்தை செலுத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கடந்த வியாழக்கிழமை (12.02.09) தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்த ‘வீரத் தமிழன்’ முருகதாசனுக்கு ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் திரண்டு வந்த தமிழர்கள் மலர் வணக்கத்தை செலுத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு அருகில் உள்ள தேவாலயத்தில் ‘வீரத் தமிழன்’ முருகதாசனின் உடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10:30 நிமிடத்துக்கு மலர் வணக்கத்துக்காக வைக்கப்பட்டது.

ஈழத்தில் தமிழர்கள் மீது சிறீலங்கா அரசு திணித்துள்ள போரினால் மக்கள் படும் அவலத்தைக் கேட்டும், காணொளியில் கண்டும் அதனால் மனம் நொந்த ‘வீரத் தமிழன்’ முருகதாசன், தாயகத்தில் நிலவும் அவலத்தை உலக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வரும் நோக்கோடு தன்னையே தீக்கு இரையாக்கிய செய்தி கேட்டு துடித்த தமிழர்கள் தமது வணக்கத்தை செலுத்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தேவாலயத்திற்கு அணி திரண்டு வந்தனர்.

வணக்கத்தை முடித்துக்கொண்ட மக்கள் தங்களது உள்ளக்குமுறலை உலக சமூகத்திற்கு எடுத்துக்கூற பேரணியில் கலந்து கொள்வதற்கு ஜெனீவா பிரதான தொடரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்றனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.