விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பில் தாக்குதல், 42 பேர் காயம்

தமிழீழ விடுதலை புலிகளின் இரு விமானங்கள் கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலமையகம் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டத்தின் மீதும் கொழும்பு துறைமுகப் பகுதியிலும் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.
இதன் போது 2 விமானப்படையினர் உட்பட 40 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பு நோக்கி வருவது கதுவீயில் அவதானிக்கப்பட்டதனையடுத்து சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் தன்னியக்கமாக இயங்கத் தொடங்கின.

அதனையடுத்து கொழும்பு நகரம் முற்றாக மின்சாரம் தடைப்பட்டும் தொலைபேசி துண்டிக்கபட்டும் இருந்தது. கொழும்புக்குள் இரவு 9.30 மணியளவில் உள்நுழைந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகப் பகுதியிலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீதும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து கட்டுநாயக்க பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு விமானம் விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் உடைவுகளையும் விமானியின் சடலத்தையும் படையினர் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்திலும் முழுமையான மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரியப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.