கொழும்பில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்

இலங்கைத் தலைநகர் கொழும்பில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 42 பேர் காயங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

கொழும்பின் வான் பரப்பிற்குள் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டு நுழைந்ததாகவும், அதில் ஒரு விமானம் வீசிய குண்டு கொழும்பில் உள்ள இறைவரித் திணைக்களத்தின் அலுவலகம் மீது விழுந்து வெடித்ததில் 42 பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறைவரித் திணைக்கள அலுவலகம் கொழும்பிலே விமானப் படை தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானங்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் கனரக துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். கொழும்பில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பகுதியில் விடுதலைப் புலிகளுடைய விமானம் ஒன்றை அரச படையினர் சுட்டு வீழ்த்தியிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

வீழ்த்தப்பட்ட விமானியுடைய சடலமும் விமானத்தின் சிதிலங்களும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.