ஜோன் ஹோம்ஸின் விஜயத்தையடுத்து வவுனியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

வீரகேசரி இணையம் 2/20/2009 2:35:52 PM – ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஆகியோரின் விஜயத்தையடுத்து, வவுனியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏ9 வீதி உட்பட முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. மேலதிக இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

வவுனியா செயலகத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த முக்கிய உயர் மட்ட கூட்டத்தில் ஜோன் ஹோம்ஸ் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததையடுத்து, செயலகம் அதியுச்ச பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

விசேட பாதுகாப்புப் படையினர் கடமையில் நிறுத்தப்பட்டு, வவுனியா செலயக அதிகாரிகள், ஊழியர்கள் கூட கடும் சோதனைக்குப் பின்பே செயலக வளவினுள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்களும் பலத்த சோதனையின் பின்பே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் அழைக்கப்பட்டவர்கள் மாத்திரம் பெயர்ப்பட்டியலுக்கமைய செயலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு உள்ளுர் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதேபோன்று, ஜோன் ஹோம்ஸ் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஆகியோர் பார்வையிடுவதற்காக செல்லவிருந்த மணிக்பாம் பகுதியிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன

Source & Thanks : virakesari.lk

Leave a Reply

Your email address will not be published.