இலங்கையில் தமிழனத்தை கொன்று குவித்து வரும் ராஜபக்சவை சர்வதேச குற்றவாளியாக ஐ.நா.சபை அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த கடலூர் இளைஞர் தமிழ்வேந்தன் என்கிற ஜோதியின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டது. அங்கு திருமாவளவன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமா மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது:-

ஈழத்தமிழர்களுக்காக இதுவரை ஏறத்தாழ 8 பேர் இன்னுயிரை ஈந்துள்ளார்கள். நாம் ஆயுதம் ஏந்தி போராட தயாராக வேண்டுமே தவிர தீவைத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கக்கூடாது என்று கடலூர் வீதியில் நின்று உங்களை செஞ்சி இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

நானும் கூட சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி இருக்காவிட்டால், தமிழ் வேந்தன், முத்துக்குமரன் போல் ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டு இருப்பேன்.

நமது கோரிக்கைகளை இந்திய அரசு கேட்காது என்று தெரியும். ஆனாலும் திருமாவளவன் உயிர்விட்ட பிறகாவது இந்திய அரசு முடிவு எடுக்கட்டும் என்று தான் சாகும் வரை உண்ணா விரதம் இருப்பது என்று முடிவு எடுத்தேன். ஆனால் அது கருணாநிதியும், திருமாவளவனும் சேர்ந்து நடத்துகிற நாடகம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொன்னார்.

போரில் அப்பாவி மக்கள் சாகத்தான் செய்வார்கள், பிரபாகரன் ஆயுதத்தை கீழே போட்டு சரண் அடைய வேண்டும் என்று ஜெயலலிதா சொல்கிறார். காங்கிரஸ்காரன் கூட அரசியலுக்காக தி.மு.க.வோடு கைகோர்த்து, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான்.

சுப்பிரமணிய சாமியை தாக்கியதற்கு திருமாவளவன் தான் ஆள் அனுப்பினார். எனவே திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று சோ சொல்கிறார். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். மேடையில் இருந்து இறங்கி வீட்டுக்கு போகவும் தயார், சிறைக்கு போகவும் தயாராக இருக்கிறோம். நீங்கள் (தி.மு.க.) ஒத்துழைத்தால் உங்கள் வழியில் சேர்ந்து வருவோம். ஒத்துழைக்கா விட்டால் எங்கள் வழியில் பயணம் ஆவோம்.

இலங்கை பிரச்சினை 25 ஆண்டுகாலமாக தொடர்ந்து கொண்டு இருப்பதற்கு இந்திய அரசு தான் காரணம். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் இலங்கை தமிழர்கள் அழிவதை இந்தியா தடுக்கவில்லை என்கிறார்கள். உண்மை அதுவல்ல. ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பும் இந்தியாவின் நோக்கம் அதுவாகத்தான் இருந்தது. தெற்காசியாவில் இந்தியா வல்லரசாக விளங்க விரும்புவதே இதற்கு காரணம்.

இன்றைக்கு ஆளுங்கட்சி கூட்டணியில் நாம் இருந்தாலும் கூட விடுதலை சிறுத்தைகள் 16 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 300 பேர் இன்னும் சிறையில் இருந்து வெளியே வரமுடியவில்லை. ஒருவேளை விடுதலை சிறுத்தைகளையும் பிரித்து விட்டால் தி.மு.க.வை தனிமைப்படுத்திவிடலாம் என காவல்துறை நினைக்கிறதோ என தெரியவில்லை.

திருமாவளவனின் போராட்டம் சரியில்லை என்றால் முல்லைத்தீவு போக விரும்புகிறவர்களுக்கு வழி காட்ட தயாராக இருக்கிறேன். காவல்துறை கெடுபிடி செய்தாலும் புலிகள் விரும்பினால் நாம் முல்லைத்தீவுக்கு போக முடியும். ஆகவே நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

முன்னதாக திட்டக்குடியில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் தமிழனத்தை கொன்று குவித்து வரும் இலங்கை அதிபர் ராஜபக்சவை சர்வதேச குற்றவாளியாக ஐ.நா. அறிவிக்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் ஐநா சபை தலையிட்டு அமைதியை நிலைநாட்ட போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும்.

அங்கு அப்பாவி தமிழர்களை கொன்று வரும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சவை சர்வதேச குற்றவாளியாக ஐநா சபை அறிவிக்க வேண்டும்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர்களுக்கு ஆதரவாக போராடாத ஒரே கட்சி அதிமுக தான். அவர்களுக்கு மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.