தமிழ்நாட்டு ஊடகங்களின் ஈழ ஆதரவுக் குரலானது அந்த மக்களின் உணர்வுக் குரல்”: ‘நக்கீரன்’ கோபால்

தமிழ்நாட்டு ஊடகங்களின் ஈழ ஆதரவுக் குரலானது தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுக் குரல்” என்று வாரமிருமுறை வெளிவரும் ‘நக்கீரன்’ வார இதழின் ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளார்.

‘நக்கீரன்’ இதழுக்கு சிறிலங்காவின் துணைத் தூதுவர் அம்சா மிரட்டியது தொடர்பாக அவுஸ்ரேலிய தமிழ் ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (17.02.09) ஒலிபரப்பாகிய “செய்தி அலைகள்” நிகழ்ச்சிக்கு கோபால் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் ஒரு கருத்துக்கணிப்பினை நடத்தினர். இலங்கை இனப்பிரச்சனையில் எந்தளவுக்கு சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி நாசப்படுத்தி வருகின்றன என்பது தொடர்பில் அந்த கருத்துக் கணிப்பு இடம்பெற்றது.

மக்கள் ஆதரவில் நடத்தப்பெற்ற இக்கருத்துக் கணிப்பில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தங்களின் அடிமனதிலிருந்து வெளிவந்த குரலைப் பதிவு செய்திருக்கின்றனர். “ராஜபக்ச நாசமாய் போவான்” என்ற அவர்களின் உணர்வைத்தான் நாங்கள் மக்களின் குரலாக நக்கீரனில் பதிவு செய்திருக்கின்றோம். ஒட்டுமொத்த தமிழக மக்களும் இதனைத்தான் கூறி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் எழுப்புவது என்பதுதான் ஊடகத்துறையில் இருக்கின்ற எங்களால் முடிந்த பணியாகும். மக்கள் எழுதுகின்ற ஒன்றைத்தான் நாங்கள் அச்சுப் பிரதியாக கொண்டு வருகின்றோம்.

இயல்பிலேயே ஒரு ஓவியனான நான், “ராஜபக்ச கொடூரமானவன்” என்று மக்கள் வெளியிடும் கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில்தான் ‘நக்கீரன்’ அட்டைப்படத்தில் ராஜபக்ச எலும்புக்கூடு மாலையோடு நிற்கின்ற மாதிரி வடிவமைத்தேன்.

இந்த அட்டைப்படம் வெளிவந்தவுடன், அதனை வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் என்று வந்த செய்திகளையெல்லாம் நான் ஒரு பொருட்டாக கருதவில்லை. அவையெல்லாம் நம் கால் தூசுக்கு சமம். அதிகார வர்கத்தின் இப்படியான ஆணவச் செயல்களுக்கு இதுவரை நாங்கள் அடிபணிந்தது கிடையாது.

இந்தச் செய்தியும் அட்டைப்படமும் வெளிவந்த பின்னர் கிடைத்த வரவேற்பைப் போல் இதுவரை ஒன்றை நான் பாத்ததில்லை. நாங்கள் நினைத்ததை, எங்கள் உள்ளத்தில் இருந்ததை நாங்கள் வெளியிட்டுள்ளதாக எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் எங்களுக்குப் பாராட்டினைத் தெரிவித்தன. ராஜபக்ச என்ற கொடூரனை இப்படித்தான் சித்தரிக்க வேண்டும் என அனைவருமே கருத்து தெரிவித்தனர். மக்களின் மன உணர்வுகளைத்தான் நாங்கள் அட்டைப்படமாகவும் கட்டுரையாகவும் வெளியிட்டுள்ளோம் என்பது தெளிவாகின்றது.

இதனை சாடி இந்தியாவிற்கான சிறிலங்கா துணை தூதுவர் அம்சா அவர்கள் வெளியிட்ட கடிதத்தைப் பார்த்தீர்களானால் அவர் வரம்பு மீறி செயற்பட்டிருப்பது நன்கு தெரியும். அவர் எப்படியான கீழ்த்தரமான வேலைகளைச் செய்து வருகின்றார் என்பதும் உலகிற்கு தெரியும், தமிழ் உலகிற்கும் நன்கு தெரியும்.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழக மக்களின் இதய துடிப்பாக விளங்கும் நக்கீரனை மன்னிப்பு கேட்கச் சொல்லும் தைரியத்தை இவர்களுக்குத் தந்தது யார்?

இதே தைரியத்தோடு ராஜபக்சவும் செயற்படுகின்றார். ராஜபக்ச என்பவர் நல்ல விடயங்களைச் செய்து வருகின்ற ஒருவர் என்பது மாதிரியும், அவர் இலங்கை மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் நல்லமுறையில் நடத்துகின்றார் என்பது மாதிரியும் அவரை நாங்கள் வேண்டும் என்றே புண்படுத்தி விட்டோம் என்பது மாதிரியும் கடிதப்படுத்தியிருக்கின்றார்.

யாருடைய மனதை யார் களங்கப்படுத்துவது?

ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உள்ளத்தை களங்கப்படுத்தி கொத்துக் கொத்தாக இலங்கைத் தமிழர்களின் உயிரை வாங்கி ராஜபக்சவின் மனதையா நாங்கள் களங்கப்படுத்தினோம்!

நம் இனத்தில் ஒற்றுமை கிடையாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் வெளிப்பாடுகளை நாம் நேரில் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். இதில் அம்சாவுடன் இயங்குகின்ற தமிழ் பத்திரிகையாளர்களும் அடங்குவர். ஆனால் இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அவர் விடுகின்ற மிரட்டலை எங்கள் தன்மானத்திற்கு விடுகின்ற மிரட்டலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு இடம் கொடுத்து தூதரகம் அமைக்க வழி விட்டிருக்கின்ற நிலையில், அவர்கள் இயங்குகின்ற அந்நிய நாட்டில் இருக்கின்ற ஒரு பத்திரிகைக்கு எச்சரிக்கை விடுக்கின்ற நிலை காணக்கூடியதாய் இருக்கின்றது.

அவருக்கு ஆதரவாகவும் சிறிலங்கா இராணுவத்திற்கு ஆதரவாகவும் செயற்படுகின்ற பத்திரிகைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான நிருபர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான், உண்மை செய்திகளை வெளியிடும் “நக்கீரன்” போன்ற பத்திரிகைகளை மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு அவர்களுக்குத் தைரியம் கொடுப்பது பக்கத்தில் இருக்கின்ற ஆட்கள் என்பதை மறந்துவிட முடியாது.

எங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான கடிதங்கள் தொடர்ந்து வந்தபடிதான் இருக்கின்றன. நாங்கள் செய்தது மிகச் சரியான வேலைதான் என்பதையே அந்த கடிதங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் வழி ஒட்டு மொத்த மக்களின் உணர்வலைகளை நாங்கள் பிரதிபலிக்கின்றோம் என்பது மிகச் தெளிவாகக் தெரிகிறது.

அண்மையில் நடைப்பெற்ற ஒரு கருத்துக்கணிப்பில் உண்மையை உள்ளபடியே சொல்கின்ற ஒரே பத்திரிகையாக நக்கீரனை மக்கள் தெரிவு செய்துள்ளனர். எங்கள் பத்திரிகைகான ஆதரவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நடக்கின்ற இனப்படுகொலை தார்மீக முறையில் எதிர்ப்பது குறித்தான உணர்வலைகள் எங்கும் காணக் கூடியதாய் இருக்கின்றது.

தங்களின் தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்படுவதை தொடர்ந்து அவதானித்து வருகின்ற நிலை மக்களிடையே காணக்கூடியதாய் இருக்கின்றது.

இது ஓர் எழுச்சி. 1983-ஆம் ஆண்டு ஏற்பட்ட எழுச்சியை விட பல மடங்கு மிகப் பெரிய எழுச்சி இது. இது ஈழத் தமிழர்களுக்கு நல்தொரு விடிவைக் கொண்டு வரும். நம் குடும்பத்தில் நடப்பது போன்றதான ஒரு சோகத்தை நாம் எப்படி பகிர்ந்து கொள்கிறோமோ அந்தளவிற்குதான் அவர்கள் உறவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்” என்றார் அவர்.

Source & Thanks ; puthinam.com

Leave a Reply

Your email address will not be published.