தங்கள் விமானங்களை எரித்துவிட்ட விடுதலை புலிகள்!

கொழும்பு: ராணுவத்தின் வசம் தங்களது விமானங்கள் சிக்கி விடாமல் தடுப்பதற்காக விமானங்களை விடுதலைப் புலிகள் தீவைத்துக் கொளுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் விமான ஆராய்ச்சிக் கூடமாகச் செயல்பட்டு வந்த இடத்தை அந்த நாட்டு ராணுவத்தினர் புதன்கிழமை கண்டுபிடித்தனர்.

இந்த ஆராய்ச்சிக்கூடம் பழைய விமானங்களைப் பழுதுநீக்குவதற்காகவோ அல்லது புதிய விமானத்தை வடிவமைப்பதற்காகவோ பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே விடுதலைப் புலிகள் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இடத்தை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவின் வடகாச்சி பகுதியில் இலங்கை ராணுவத்தினர் புதன்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் விமானத்தின் எரிந்த பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற போது இந்த விமானத்தை அவர்கள் தீவைத்துக் கொளுத்தியிருக்கலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த இடத்தில் விமான இறக்கையின் சிதைந்த பாகம் உள்பட விமானத்தில் பயன்படுத்தப்படும் பல சாதனங்கள் எரிந்த நிலையில் கிடந்ததாக அந்த வட்டாரங்கள் கூறின.

நவீன இலகுரக விமானம் தயாரிப்பதற்கான வரைபடம், விமான கட்டுமானப் பொறியியல் தொடர்பான தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் அந்த இடத்தில் கிடந்தன.

மேலும், லேத் இயந்திரங்கள், அலுமினியத் தகடுகள், மோட்டார் இயந்திரத்தின் பாகங்கள் மற்றும் இதர சாதனங்களும் கிடந்தன. எனவே, இந்த இடத்தில் விடுதலைப் புலிகள் ரகசியமாக விமானம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியாவின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் விமானம் வட்டமிட்டதாக கடந்த ஆண்டு, நவம்பர் 6 ஆம் தேதி தகவல் பரவியதால், இலங்கையின் விமானப் படையும், ராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டன.

வவுனியாவுக்கு 2 கி.மீ. தொலைவில் பறந்த அந்த விமானம் இலங்கை ராணுவத்தின் ரேடார் கருவிகளில் புலப்படாமல் மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டது. அதன்பிறகு, அந்த விமானம் என்னவானது எனத் தெரியவில்லை என டெய்லி மிர்ரர் நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த ஆண்டு, ஜனவரியில் விடுதலைப் புலிகள் வடிவமைத்து வந்த நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்ததையடுத்து, அந்த நாட்டு அரசு அதிர்ச்சியடைந்தது.

கடந்த ஆண்டு, அக்டோபரில் மன்னாரில் இலங்கை ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியவுடன், தலைநகர் கொழும்பில் உள்ள மின் நிலையம் மீது விடுதலைப் புலிகளின் மினி விமானம் இரு குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்த மின் நிலையத்துக்கு சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது.

அதே நாள் இரவு வட மேற்கு மன்னாரில் உள்ள ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானம் 3 குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றது. இந்தத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் லேசான காயமடைந்தனர்.

விடுதலைப் புலிகளிடம் செக் நாட்டில் வடிவமைக்கப்பட்ட மூன்று இலகு ரக விமானங்கள் உள்ளன என்பதுக குறிப்பிடத்தக்கது. இந்த விமானங்களை கடந்த 2006, ஏப்ரல்- ஜூலை மாதங்களில் கொள்முதல் செய்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

கடந்த 2007, மார்ச்சில் கொழும்பு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் உள்ள இலங்கை விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் முதன் முறையாக வான்வழித் தாக்குதலை நடத்தி உலகை வியப்படைய வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.