மும்பை தாக்குதலுக்கான சதி திட்டம் உருவான இடம் குறித்து புதிய தகவல்

இஸ்லாமாபாத்:மும்பை தாக்குதலுக்கான சதித் திட்டம் உருவான இடமாக கருதப்படும் பாகிஸ்தானில் உள்ள ஒரு வீட்டை “டிவி’ சேனல் ஒன்று, படம் பிடித்து காட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தியாவை மட்டுமல்லாமல், உலகம் முழுவதையும் உலுக்கியது.


இந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்து வந்த பாகிஸ்தான்,உலக நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து இந்த விஷயத்தில் சற்று இறங்கி வந்துள்ளது.தாக்குதலுக்கான சதித் திட்டத்தின் ஒரு பகுதி பாகிஸ்தானில் உருவானது என ஒப்புக் கொண்டுள்ளது.இந்நிலையில், சதித் திட்டம் உருவானதாக கூறப்படும் வீடு ஒன்றை “ஜியோ’ “டிவி’ சேனல் படம் பிடித்து காட்டியுள்ளது.

இந்த வீடு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மிர்புர் சக்ரோ என்ற இடத்தில் உள்ளது. (குஜராத் கடற்கரையில் இருந்து 160 கி.மீ., தூரத்தில் மிர்புர் சக்ரோ உள்ளது) ஒரு மிகப் பெரிய சுற்றுச் சுவருக்கு மத்தியில் இந்த வீடு உள்ளது.வீட்டில் சிறிய அறைகள் உள்ளன.சில செய்தித் தாள்கள்,புத்தகங்கள் அலமாரியில் நிரம்பி கிடக்கின் றன. வீட்டின் சுவரில் மிகப் பெரிய அளவிலான உலக வரைபடம் ஒட்டப் பட்டுள்ளது. அதில் மும்பை நகரம் இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் நடந்த பின், பாகிஸ்தான் போலீசார் இங்கு வந்து தேடுதல் வேட்டை நடத்தியதற்கு அறிகுறியாக பொருட்கள் கலைந்து கிடக்கின்றன. இந்த காட்சிகளை “ஜியோ’ “டிவி’ ஒளிபரப்பியது.இந்த வீட்டின் பொறுப்பாளராக செயல்படும் மும்தாஜ் என்பவர் கூறுகையில், “இங்கு தங்கியிருந்தவர்கள் எங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். அவர்களைப் பற்றிய விவரம் தெரியவில்லை. அவர்கள் கொடுத்த மொபைல் போனை தொடர்பு கொண்டால் எந்த பதிலும் கிடைக்க வில்லை’ என்றார்

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.