காதலனுடன் இருந்த பெண் கடத்தி கற்பழிப்பு: கோவையை சேர்ந்த மூவருக்கு ஆயுள் தண்டனை

கோவை: ஆற்றங்கரையில், காதலனுடன் பேசிக் கொண்டிருந்த காதலியை கடத்தி கற்பழித்த, மூன்று வாலிபர்களுக்கு, கோவை மகளிர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. கோவை மாவட்டம், போத்தனூர், செட்டிபாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் ஜான்சி(23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது); செங்கல், மணல் மொத்த விற்பனை மைய ஊழியர். இவரது காதலன் சுரேஷ்(26); ஒப்பனக்காரவீதியில், பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.


2007ல் சுரேஷ் சென்னைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இவர்களின் சந்திப்பு தடைபட்டது. ஆனாலும், சுரேஷ் கோவை வரும்போதெல்லாம், காதலியை சந்திப்பது வழக்கமாக இருந்தது. 2007, ஆக.31.,ல் கோவை வந்த சுரேஷ், காதலியை சந்திப்பதற்காக போத்தனூர் சென்றார். மாலை 4.00மணி அளவில், இருவரும் நஞ்சுண்டாபுரம் ஆற்றங்கரைக்கு சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில், அதே ஊரைச் சேர்ந்த சரவணபாண்டியன்(30) வந்தார். காதலர்களைப் பார்த்ததும், “எங்க ஊர் பெண்ணுடன் வெளியூர் ஆட்கள் பேசக்கூடாது’என, எச்சரிக்கை விடுத்து, சுரேஷை அங்கிருந்து போய் விடும்படி மிரட்டல் விடுத்தார்.

இருவரும் அங்கிருந்து நகர முயன்றபோது, மொபைல் மூலம் யாருக்கோ சரவணபாண்டியன் தகவல் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில், நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த பழனிசாமி(27), இளம்பரிதி(26), முரளி(28) ஆகியோர் வந்தனர். உடனே சரவணபாண்டின், வந்தவர்களைப் பார்த்து, சுரேஷை போத்தனூர் பஸ் ஸ்டாண்டிலும், ஜான்சியை அவரது வீட்டிலும் பைக்கில் அழைத்துச் சென்று விட்டு விடும்படி கூறினார்.

முரளி தனது பைக்கில் சுரேஷை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், ஜான்சியை அழைத்துச் சென்ற பழனிசாமி, வீட்டுக்கு செல்லாமல், வெள்ளலூர் ரோட்டில் உள்ள சி.ஆர்.பி.எப்., முகாம் அருகே உள்ள புதருக்கு அழைத்துச் சென்று, பலவந்தமாக கற்பழித்தார். அடுத்தடுத்து வந்த நண்பர்கள் ஒவ்வொருவராக ஜான்சியை கற்பழித்தனர். இதன்பின், ஜான்சியை பைக்கில் ஏற்றி, வெள்ளலூர் ரோட்டில் உள்ள அனாதைகள் இல்லம் அருகே இறக்கி விட்டவர்கள், அங்கிருந்து தப்பினர்.

போத்தனூர் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த சுரேஷை சந்தித்த ஜான்சி, தனக்கு நேர்ந்ததை கூறி அழுதார். இருவரும் போத்தனூர் போலீசில் புகார் கொடுத்து, கற்பழித்தவர்களின் பெயர், அடையாளத்தை கூறினர். இளம்பரிதி, கோவையில் கைது செய்யப்பட்டார். முரளி உள்ளிட்ட மூவர், திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நால்வரும், பாதிக்கப்பட்ட பெண் ஜான்சியால் அடையாளம் காட்டப்பட்டனர். இதில், பயந்து போன முரளி, சிறையின் முதல் மாடியில் இருந்து தலைகீழாக குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் தமிழ்செல்வி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதமும் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.