இந்திய வெளியுறவு அமைச்சர் அறிக்கை குறித்து தொடரும் சர்ச்சை

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் இன்று மக்களவையில் வலியுறுத்தினார்கள்.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் பேராசிரியர் ராமதாஸ் பேசும்போது, பிரணாப் முகர்ஜியின் அறிக்கை அவரது தனிப்பட்ட கருத்தைப் போல இருப்பதாகவும், இந்திய அரசின் கருத்தை வெளிப்படுத்துவதைப் போல இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

வெளியுறவு அமைச்சர் உடனடியாக அந்த அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அதுதொடர்பாக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், மதிமுக உறுப்பினர்கள் டாக்டர் கிருஷ்ணன் மற்றும் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோரும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களும், இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பிரணாப் முகர்ஜி தனது அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று டெல்லியில், பாஜகவைச் சேர்ந்த எதி்ர்க்கட்சித் தலைவர் அத்வானியைச் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள், இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசினார்

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.