தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: டிஜிபி

சென்னை: வக்கீல்கள், போலீஸாருக்கு இடையே நடந்த மோதலில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி கே.பி.ஜெயின் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றக் கலவரம் முடிந்ததும் அங்கு டிஜிபி ஜெயின், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், அரசுத் துறை செயலாளர்கள் விரைந்து வந்தனர்.

தற்காலிக தலைமை நீதிபதியின் அறையில் அவருடன் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி ஜெயின், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி தமிழக அரசு விளக்கம் அளிக்க உள்ளது. பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது.

துப்பாக்கிச் சூடு தவிர்ப்பு

நேற்றைய சூழ்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு போலீஸார் தயாராகி விட்டனர். ஆனால், கமிஷனர் ராதாகிருஷ்ணன் விரைந்து எடுத்த நடவடிக்கையால் அது தவிர்க்கப்பட்டது.

முதலில் அமைதியாக கூறியும், பின்னர் தடியடி நடத்தியும் வக்கீல்களை கலைக்கப் பார்த்தனர் போலீஸார். ஆனால் வக்கீல்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போலீஸார் மீது கற்களை வீசித் தாக்கியபடி இருந்ததால், கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன.

அப்படியும் வக்கீல்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு போலீஸார் தயாரானார்கள். உத்தரவு வந்ததும் சரமாரியாக சுடுவதற்கும் அவர்கள் ஆயத்தமாக இருந்தனர்.

ஆனால், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், போலீஸாரை அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்கும்படி கட்டுப்படுத்தினார். இதனால் போலீஸார் சற்று சாந்தமடைந்து கட்டுக்குள் வந்தனர்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.