பிரச்சனையை ஆரம்பித்ததும் போலீஸ்!-வாகனங்களை நொறுக்கியதும் போலீஸே!!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வன்முறையை போலீசார் தான் ஆரம்பித்தனர். மேலும் நீதிமன்றத்தில் நின்றிருந்த கார்கள், பைக்குகளை போலீசார் தான் வெறி கொண்டு தாக்கி உடைத்ததுள்ளனர்.

நேற்று வழக்கறிஞர்கள்-போலீஸார் இடையே நடந்த மோதலில் நீதிபதி உள்ளிட்ட பலருக்கு மண்டை உடைந்தது. பல வழக்கறிஞர்கள், பொது மக்கள் ரத்தக் களறியுடன் உயிர் தப்பியுள்ளனர்.

போலீசாரின் வெறித் தாக்குதலில் இருந்து தலைமை நீதிபதி முகோபாத்யாயா மயிரிழையில் தப்பியுள்ளார். யார் என்று தெரியாமல் அவரையும் போலீசார் விரட்டினர். அவர் ஓடியதால் தாக்குதலில் இருந்து தப்பினார்.

இந்த மோதலையே போலீசார் தான் ஆரம்பித்தனர் என்பது தெரியவந்துள்ளது.

போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலையடுத்தே வழக்கறிஞர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தி உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையத்தைத் தீவைத்துக் கொளுத்தினர்.

பிரச்சனை தொடங்கியது எங்கே?:

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முட்டை வீசப்பட்டது.

இதுதொடர்பாக 20 வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக, சுப்பிரமணியன் சுவாமி மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று 10 வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்ய வந்தனர்.

ஆனால், அவர்களை போலீசார் தடுத்தனர். சுப்பிரமணியன் சுவாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்த வழக்கறிஞர்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறி, போலீஸார் அவர்களைக் கைது செய்ய முயன்றனர்.

அப்போது, நாங்கள் சுவாமி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வலியுறுத்த சென்று கொண்டிருக்கிறோம். புகாரை பதிவு செய்துவிட்டு வந்துவிடுகிறோம். அதன் பின்னர் வேண்டுமானால் கைது செய்து கொள்ளுங்கள் என்றனர்.

ஆனால், அதை போலீசார் காதில் வாங்கவில்லை. வழக்கறிஞர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்ற போலீஸார் முயன்றனர். இதையடுத்து வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

அப்போது போலீஸார் மீது வழக்கறிஞர்கள் கல்வீசித் தாக்கவே போலீஸார் வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்தினர். ஆனால், தாங்கள் கைது செய்ய வந்த வழக்கறிஞர்களை மட்டும் போலீசார் தாக்கியிருந்தால் பரவாயில்லை.

அதை விட்டுவிட்டு நீதிமன்றத்தில் உள்ள எல்லா கோர்ட் ஹால்களிலும் நுழைந்த தமிழக ரேப்பிட் ஆக்ஷன் போர்ஸ் போலீசார் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து துவைத்தனர்.

அனைத்து வழக்கறிஞர்களையும் பொது மக்களையும் விரட்டி விரட்டி அடித்தனர். குடும்ப நீதிமன்றம், சிட்டி சிவில் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் அறைகள் என எந்த இடத்தையும் போலீசார் விடவில்லை.

சகல இடங்களிலும் நுழைந்து எதிர்ப்பட்ட அனைவரையும் போலீசார் வெறித்தனமாகத் தாக்கினர். மேலும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளர் மோகனகிருஷ்ணனை போலீஸார் குறி வைத்து, சூழ்ந்துகொண்டு மிகக் கடுமையாகத் தாக்கினர்.

இதில் அவர் படுகாயமடைந்தார். உடனே அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதே போல கோர்ட் வளாகத்தில் இருந்த வாகனங்களையும் போலீசார் அடித்து உடைத்தனர். இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொது மக்கள், கோர்ட் ஊழியர்களின் கார்கள், பைக்குகள் எதுவும் தப்பவில்லை,

யாரைத் தாக்குகிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் தலைமை நீதிபதியை விரட்டினர் போலீஸார். மோதல் நடப்பதை அறிந்த தலைமை நீதிபதி முகோபாத்யாயா, நீதிபதி ரகுபதி, நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், நீதிபதி ஜோதிமணி, நீதிபதி சசிதரன் ஆகியோர் வழக்கறிஞர்களுடன் வந்தனர்.

அப்போது, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை நோக்கி போலீஸார் தடிகளுடன் ஓடி வந்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி முகோபாத்யாயாவும் நீதிபதிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடினர். இதனால் தப்பினர்.

அப்போது நீதிபதி அறுமுகப் பெருமாள் மீது கல் வீசப்பட்டதில் அவரது மண்டை உடைந்தது. இதையடுத்து அவரைக் காக்கச் சென்ற வழக்கறிஞர்களையும் போலீசார் மிகக் கடுமையாகத் தாக்கினர்.

போலீசார் நடத்திய இந்த காட்டுமிராண்டித்தனத்தில் டைம்ஸ் நவ் செய்தியாளர்கள் காயமடைந்தனர். வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலில் இண்டியன் எக்ஸ்பிரஸ் போட்டோகிராபர் ராஜா சிதம்பரம் காயமடைந்தார்.

இந்த மோதலில் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர். அனைவரும் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 64 பேர் அட்மிட் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் இந்த தாக்குதல் தொடர்பான ஏராளமான உண்மைகள் வெளிவரலாம்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.