மகிந்த அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்திய ஐ.நா. செயலாளர்

சிறிலங்கா படைத்தரப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரினால் வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள பொதுமக்கள் பல வழிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து அனைத்துலக நாடுகள் கவலையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கொல்லப்படுவதனை படைத்தரப்பும் விடுதலைப் புலிகளும் தவிர்க்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக இன்று வியாழக்கிழமை அதிகாலை கொழும்புக்கு சென்றுள்ள ஜோன் ஹோல்ம்ஸ், இன்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

போர் நடைபெறும் பகுதியில் இருந்து வெளியேறும் பொதுமக்களை விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி கொலை செய்வதாக மகிந்த அரசாங்கம் செய்துவரும் பிரசாரங்களை மேற்கோள் காட்டி விளக்கமளித்த ஜோன் ஹோல்ம்ஸ், சிறிலங்கா படைத்தரப்பு மக்களை பாதுகாக்கின்ற விடயத்தில் கவணமாக செயற்பட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜோன் ஹோல்ம்ஸ், மகிந்த அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

அத்துடன், மக்களுக்கான மனிதாபிமான பணிகளில் அரசாங்கம் ஈடுபடுவது குறித்து திருப்தியடைவதாகவும் தெரிவித்தார்.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜோன் ஹோல்ம்ஸ், புலிகளுக்கு எதிராக நடைபெறும் போரை நிறுத்துமாறு கோர முடியாது என்றும் கூறியதுடன் மக்கள் வெளியேறுவதற்காக மட்டும் போரை நிறுத்துவது நல்லது எனவும் விளக்கமளித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நிதி உதவிகள் செய்யப்படும். ஏற்கனவே அவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜோன் ஹோல்ம்ஸ் சுட்டிக்காட்டினார்.

ஆனால், எதிர்காலத்தில் வழங்கப்படும் நிதி உதவிகள் யாரிடம் வழங்கப்படும் என்பது குறித்து அவர் எவும் தெரிவிக்கவில்லை.

2007 ஆம் ஆண்டு ஜோன் ஹோல்ம்ஸ் கொழும்புக்கு வருகை தந்தபோது, கொல்லப்பட்ட மூத்த அமைச்சர் அமரர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே இவரை ஒரு பயங்கரவாதி என்று கூறியதுடன் அது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 22 ஆம் நாள் வரை ஜோன் கோம்ஸ் கொழும்பில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.