ஐ.நா. முன்றலில் நாளை மாபெரும் கண்டன பேரணி: ஐரோப்பிய தமிழர்கள் அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு

சுவிற்சர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அலுவலகத்திற்கு முன்பாக நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஐரோப்பிய தமிழர்கள் அனைவரையும் அணிதிரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு ஐரோப்பிய தமிழ் இளையோர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜெனீவா பிரதான தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் இருந்து நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் தொடங்கும் பேரணி, ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக நிறைவடைந்து அங்கு கண்டன ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.

கண்டன ஒன்றுகூடலின் போது ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக தீக்குளித்து மரணமடைந்த முருகதாசனுக்கு மலர் வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காலை 10:30 நிமிடம் முதல் பிற்பகல் 12:00 மணி வரை ஐக்கிய நாடுகள் சபைக்கு அருகில் உள்ள தேவாலயத்தில் ஈகப்பேரொளி முருகதாசனின் புகழுடலுக்கு பொதுமக்கள் தமது வணக்கத்தினை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிற்சர்லாந்தின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி போன்ற ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து 60-க்கும் அதிகமான பேருந்துகளிள் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக மக்கள் அணிதிரள இருப்பதாக ஐரோப்பிய தமிழ் இளையோர்கள் தெரிவித்தனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.