எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த அரசாங்கம் பெரும்பான்மை பெறாது: லக்ஸ்மன் கிரியெல்ல

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஒருபோதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறாது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை மகிந்த அரசாங்கம் முன்வைத்தால் அது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பரிசீலிக்க தயாராகவுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழைமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்க் கட்சிகளுடன் பேசி இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யுமா இல்லையா என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் எதுவும் கூற முடியாது.

அரசாங்கம் அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழுவின் மூலமாக தயாரிக்கப்பட்ட தீர்வு யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காது. அதனை ஐக்கிய தேசியக் கட்சி பரிசீலிக்கும்.

அந்த யோசனை குறித்து தமிழ்க் கட்சிகளுடன் நாங்களும் கலந்துரையாடுவோம். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது வேடிக்கையானது.

17 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு சபையை அரசாங்கம் முதலில் செயற்படுத்த வேண்டும். அப்போதுதான் நீதியான சுதந்திரமான நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியும். ஆனால், அரச தலைவர் அரசியலமைப்பு சபையை உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.