லேடன்-பதுங்குமிடத்தில் யு.எஸ். குண்டு வீச்சு

காபூல்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின் லேடன் பதுங்கியுள்ளதாக கருதப்படும் பாக் – ஆப்கன் எல்லையில் உள்ள குர்ரம் என்ற இடத்தில் அமெரிக்க படைகள் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது. இருப்பினும் அங்கு லேடன் பதுங்கியிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே என அமெரிக்கத் தரப்பில் இப்போது கூறப்படுகிறது.

சந்திரமுகி படத்தில் வடிவேலு, ரஜினியிடம் பேய் இருக்கிறதா, இல்லையா, அதை பார்த்திருக்கிறார்களா, இல்லையா என்று கேட்பார்.

அதேபோல, பின்லேடான் இருக்கிறாரா, இல்லையா, அப்படி இருந்தால் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு லேடன் குறித்த குழப்பம் நீடித்து வருகிறது.

பின் லேடன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் லேடனின் வீடியோ செய்திகள் அடிக்கடி வெளி வரும். ஆனால் இப்போது வெளிவருவது இல்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள குர்ரம் என்ற இடத்தில் பின் லேடன் பதுங்கியிருப்பதாக அமெரிக்க அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில், அப்பகுதியில் அமெரிக்கப் படைகள் அங்கு குண்டுகளை வீசித் தாக்கியுள்ளன. குர்ரம் பகுதியில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

குர்ரம் பிரதேசத்தில் உள்ள பராசினார் என்ற சிறிய, தொலைதூர நகரில்தான் பின்லேடன் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை உறுதியாக நம்புகிறது.

குர்ரம், பழங்குடியனர்கள் அதிகம் வசிக்கும் தொலைதூர பிரதேசம் ஆகும். இங்கு அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இல்லை. முழுக்க முழுக்க தீவிரவாத பழங்குடியினரே இங்கு வசித்து வருகின்றனர். தலிபான்களும், அல் கொய்தா அமைப்பினரும்தான் இந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

குர்ரம் பகுதியை தற்போது அமெரிக்கப் படைகள் குறி வைத்திருப்பதால், அங்கு ஒரு வேளை பின் லேடன் இருப்பாரேயனால் பாதுகாப்பு கருதி அவர் பெஷாவர் நகருக்கு இடம் மாறக் கூடும் எனக் கருதப்படுகிறது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.