முதல்வர் மகனுக்கு ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்த ராஜு!

ஹைதராபாத்: ரூ.7,800 கோடி மோசடியில் கைதாகியுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் பிரபல பத்திரிகையொன்றின் உரிமையாளருமான ஜெகனுக்கு எக்கச்சக்கமாய் லஞ்சம் கொடுத்ததாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுவரை ரூ.200 கோடி வரை சத்யம் நிறுவனத்திடமிருந்து ஜெகன் லஞ்சமாகப் பெற்றுள்ளதாக தெலுங்கு தேசம் கூறியுள்ளது.

இந்தத் தொகையைக் கொண்டுதான் பல புதிய நிறுவனங்களை ஜெகன் துவங்கியுள்ளதாக தெலுங்கு தேசம் ஆதாரங்களோடு குறிப்பிட்டுள்ளது. ஜெகன் 24 பதிப்புகளுடன் நடத்தும் ஒரு தெலுங்கு நாளிதழ், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், டெலிவிஷன் நிறுவனங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான மொத்தப் பணமும் ராமலிங்க ராஜுவிடமிருந்தே பெறப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெலுங்கு தேசம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி:

இதற்கிடையே ராமலிங்க ராஜு மற்றும் அவரது தம்பி ராமராஜு இருவரது ஜாமீன் மனுக்களையும் மீண்டும் நிராகரித்துள்ளது ஹைதராபாத் நீதிமன்றம்.

சத்யம் நிறுவன முன்னாள் நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் வாட்லாமணியின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த மாதம் 7ம்ந் தேதி முதல் சிறையில் இருக்கும் அவர்கள் மூவரும் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் மனு தாக்கல் செய்தனர். அப்போது அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, ஐதராபாத் கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அந்த ஜாமீன் மனுக்களும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையே ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார் ராஜூ சகோதரர்களின் வழக்கறிஞர் பரத் குமார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.