கர்ப்பிணியிடம் தாலியை லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்

சென்னை: சென்னையில் 8 மாத கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை லஞ்சமாக கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜீவிதா (18). இவரது கணவர் மோகன். ஜீவிதா திருவான்மியூரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார்.
திருமணமானவுடன் ஜீவிதா கர்ப்பமடைந்தார். ஆனால், ஜீவிதாவின் நடத்தையில் மோகன் சந்தேகப்பட ஆரம்பித்தார். சேர்ந்து வாழ வேண்டுமென்றால் பெரிய அளவில் வரதட்சணை வேண்டும் என்றும் சித்ரவதை செய்ய ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தி்ல் ஜீவிதாவின் நகைகளைப் பறித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிவிட்டார். இதையடுத்து ஜீவிதா தனது பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

கடந்த 2ம் தேதி தனது தந்தை முரளிகுமார், தாயார் தமிழ்செல்வி ஆகியோரோடு ஜீவிதா அடையார் மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று இன்ஸ்பெக்டர் கீதாவிடம், தனது கணவர் செய்யும் கொடுமைகள் குறித்து புகார் தந்தார்.

மனுவை வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் கீதா, ஜீவிதாவையும் மோகனையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தினார். அப்போது இனிமேல் ஜீவிதாவோடு வாழமாட்டேன் என்று மோகன் பிடிவாதம் செய்தார்.

ஜீவிதா தினமும் தனது பெற்றோருடன் அடையார் போலீஸ் நிலையத்துக்கு நடையாக நடந்தும் கூட இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இன்ஸ்பெக்டர் கீதா இழுத்தடித்ததார்.

கணவர் பறித்து வைத்துள்ள நகைகளையாவது மீட்டுத்தாருங்கள் என்று ஜீவிதா கோரினார்.

பலநாள் ஜீவிதாவை அலைய விட்ட இன்ஸ்பெக்டர் கீதா, இனிமேல் இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன், கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று எழுதிக்கொடு என்று ஜீவிதாவிடம் கூறியுள்ளார்.

ஜீவிதா கதறி அழவே, உன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ரூ.5,000 தர வேண்டும் என்று கூறியுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறிய ஜீவிதாவிடம்,
கழுத்துல கிடக்கிற தாலிய வித்துக்கு வந்து காச குடுடி என்று சினிமா வில்லி போல இன்ஸ்பெக்டர் கீதா பேசவே, அதிர்ந்துபோன ஜீவிதா லஞ்ச ஒழிப்பு போலீசில் கீதா மீது புகார் கொடுத்தார்.

இதையடுத்து கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குனர் ராமானுஜம், ஐ.ஜி. துக்கையாண்டிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து எஸ்பி பவானீஸ்வரி, துணை எஸ்பி பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, அசோகன், இம்மானுவேல் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று மாலை அடையாறு போலீஸ் நிலையத்தில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காத்திருக்க, ஜீவிதா ரூ.5,000 பணத்தோடு, இன்ஸ்பெக்டர் கீதாவை போய் பார்த்தார்.

அப்போது பணத்தை கையில் வாங்காமல், தன்னுடைய டைரியை கொடுத்து அதற்குள் பணத்தை வைக்கும்படி இன்ஸ்பெக்டர் கீதா கூறினார். ஜீவிதாவும் பணத்தை டைரிக்குள் வைத்தார்.

அப்போது அங்கு புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் கீதாவை கைது செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சண்டை போட்ட கீதா பி்ன்னர் தரையில் விழுந்து புரண்டு அழுது நாடகமாடினார்.

ஆனாலும் அவரை போலீசார் விடவில்லை. அவரைக் கைது செய்ததோடு சைதாப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் உள்ள கீதாவின் வீட்டிலும் சோதனை நடத்தி ஏராளமான சொத்துப் பத்திரங்களை கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அடையார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கீதா மீது ஏற்கனவே ஏராளமான லஞ்ச குற்றச்சாட்டுகள் உள்ளன.

நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தபோது திடீரென்று தரையில் விழுந்து உருண்டு அழுததோடு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.

பின்னர் ‘மயக்கம்’ போட்டு விழுந்தார். டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு ‘சிகிச்சை’ அளிக்கப்பட்டது. அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று தெரிகிறது.

மகளிர் காவல் நிலையங்களில் பொது காவல் நிலையங்களுக்கு இணையாக அநியாயங்களும், கட்டப் பஞ்சாயத்துகளும், லஞ்சம்-ஊழலும் கொடி கட்டிப் பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் புகார் தருவோர், பிடிபட்டோரிடம் கெட்ட வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதிலும் மகளிர் காவல் நிலையங்கள் எந்த விதத்திலும் சளைத்தவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.