புலிகளுடன் போர் நிறுத்தம் இல்லை: இலங்கை அரசு மீண்டும் திட்டவட்டம்

கொழும்பு : புலிகளுடன் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என, இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இலங்கையின் வடபகுதியில் நடந்துவரும் சண்டையில், 53 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். அத்துடன் புலிகள் வசமிருந்த முக்கிய பகுதி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக இலங்கை ராணுவ தகவல் தொடர்பாளர் கெகலியா ரம்புக்வெல்லா கூறியதாவது:நாட்டில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது என, கொள்கை முடிவு எடுத்துள்ளோம். புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணி போர் நிறுத்தம் வேண்டும் என, கோரிக்கை விடுத்திருப்பது நகைப்புக்குரியது. புலிகளுடன் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகளை முழுவதும் ஒழித்துக் கட்டும் நிலையில் ராணுவம் உள்ளது. இதன்மூலம் 25 ஆண்டுகளாக நீடித்த போர் முடிவுக்கு வர உள்ளது. புலிகள் வசமிருந்த பகுதிகள் வேகமாக குறைந்து வருகின்றன.இவ்வாறு ரம்புக்வெல்லா கூறினார். இதற்கிடையில், புலிகள் வசமிருந்த முக்கிய பகுதி ஒன்றை ராணுவத்தினர் கைப்பற்றினர். அப்போது நடந்த சண்டையில், 53 புலிகள் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன. அதே நேரத்தில், அப்பாவிகள் என்ற போர்வையில் புலிகள் புகுந்து தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், ராணுவத்தினர் உஷாராக இருக்க வேண்டும் என, இலங்கை அரசு எச்சரித்துள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.