ஈழப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்: சோனியா

டெல்லி: இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று தன்னை வந்து சந்தித்த திமுக தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக் குழுவினரிடம் இந்த உறுதிமொழியை அவர் அளித்தார்.

துரைமுருகனை அமைப்பாளராகக் கொண்ட பேரவையின் துணை அமைப்பைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். முதலில் குடியரசுத் தலைவரை அவர்கள் சந்தித்தனர்.

நேற்று சோனியா காந்தியை சந்தித்தனர். கி.வீரமணி, கனிமொழி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சோனியா காந்தியுடனான சந்திப்பின்போது மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா ஆகியோர் உடன் இருந்தனர். வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது காணப்படும் அவலம், துயரங்கள், படுகொலைகள் உள்ளிட்டவற்றையும், தமிழகத்தில் நிலவி வரும் கொந்தளிப்பான சூழ்நிலை குறித்தும் சோனியா காந்தியிடம் துரைமுருகன் விளக்கமளித்தார்.

போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் சம அந்தஸ்து அளிக்க்படும் வகையில், தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கைக்கு ஐ.நா. அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யவேண்டும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வரவேண்டும், போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற 3 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவையும் சோனியா காந்தியிடம் பேரவை துணைக்குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர் நல உரிமை பேரவை துணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்த பிரச்சினைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.

அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக்குப் பின், துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கை போரினால் பலியாகும் தமிழர்களை அந்த நாட்டு குடி மக்களாகப் பார்க்காமல் அழிக்கப்படும் தமிழ் இனத்தை பாதுகாக்கும் வகையில் இந்தியா உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சோனியா காந்தியிடம் வற்புறுத்தினோம்.

எங்களுடைய கோரிக்கைகளை, சோனியா காந்தி பொறுமையாக கேட்டுக்கொண்டதுடன் இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வலியுறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார் என்றார்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.