ஜனாதிபதியின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியில் இருந்து நாராயணமூர்த்தி இராஜினாமா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்ட இந்திய இன்போசிஸ் கணனி நிறுவனத்தின் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த பதவியை தொடர்ந்து வகிக்க முடியாதென நாராயணமூர்த்தி ஜனாதிபதி மகிந்தவுக்கு அறிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது ஜனாதிபதியினால் தமக்கு அளிக்கப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவி பெருமையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதவிக்கு தம்மை நியமித்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி ஜனாதிபதியின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன சனிக்கிழமை தகவல் வெளியிட்டிருந்தார்.

எனினும், நேற்றைய தினம் இந்தப் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நாரயணமூர்த்தி அறிவித்துள்ளார்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கக் கூடாதென தமிழகத்தில் கடும் எதிர்ப்பலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.