அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்த ஷெல்களே வீடுகள் மீது விழுந்தன: வைத்திய அதிகாரி வரதராஜா தெரிவிப்பு

நேற்று புதன்கிழமை அதிகாலை படையினரின் ஆட்லறி ஷெல்கள் பொதுமக்களின் வீடுகள் மீது வீழந்து வெடித்ததால் 38 பேர் கொல்லப்பட்டனர்; 140 பேர் காயமடைந்தனர். ஷெல்கள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தெற்கு நோக்கி வந்தனவாகவே தெரிந்தன. புதுமாத்தளன் வைத்தியசாலை அதிகாரியும், சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் துரைராஜா வரதராஜா மேற்கண்ட தகவல்களை ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

அந்நிறுவனத்துக்கு அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:

அரசாங்கம் பிரகடனம் செய்துள்ள மக்கள் பாதுகாப்பு வலயப்பகுதி நோக்கி நேற்று அதிகாலை ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் நித்திரையில் இருந்த ஒரே குடும்ப உறவுகள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மொத்தம் 38 சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டன.

ஷெல்கள் யாவும் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்து பொதுமக்கள் பகுதிகளில் வீழ்ந்தன. பின்னர் இரு தடவைகள் விமானத் தாக்குதல்கள் அந்தப் பகுதியில் நடத்தப்பட்டன. அந்தத் தாக்குதலில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களின் சடலங்களும் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டன. இந்தத் தாக்குதலில் மொத்தம் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சை இன்றி மரணமாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட வசதிகள் குறைந்த வைத்தியசாலையிலேயே டாக்டர் வரதராஜா தன்னால் இயன்றவரை மக்களை காப்பாற்றப் பாடுபடுகின்றார் என்று ஏ.பி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.