நோர்வே தமிழ் மருத்துவர்கள் வன்னிக்குச் செல்ல தயார்: நோர்வே மற்றும் ஐ.நா.விடம் கோரிக்கை

வன்னியில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு, அடிப்படை மருத்துவ வசதிகளின்றி அல்லற்படும் தமிழ் மக்களுக்கு உதவ மருத்துவக்குழு ஒன்றினை வன்னிக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக நோர்வே தமிழ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்து தருமாறு நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்திடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நோர்வே தமிழ் சுகாதார அமைப்பு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தாயகத்தில் போரினால் பாரிய மனித அவலங்கள் நிகழ்ந்தேறி வருகின்றன. தொடர்ச்சியான எறிகணை, குண்டு வீச்சுக்களால் குழந்தைகள், பெண்கள் உட்பட பல பத்து உயிர்கள் நாளாந்தம் பலியாகி வருகின்றன.

உணவு மருந்து உட்பட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட நிவர்த்தி செய்ய முடியாத பாரிய நெருக்கடிகளால் வன்னிப் பிரதேசம் சூழப்பட்டுள்ளது.

இந்த அவல நிலையானது உயிர் காக்கும் மருத்துவப் பணிகளை முன்னெடுக்கும் எமக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படை மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் மருந்துகள் அற்ற நிலையிலும் காயங்களுக்கு உட்பட்டவர்களைக் கூட காப்பாற்ற முடியாத, அவர்களைப் பலி கொடுக்க வேண்டிய பேரவலம் நிகழ்கின்றது.

எனவே போர் அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி நிலைமையையும் மருத்துவ தேவைகளையும் கருத்திற்கொண்டு நோர்வே தமிழ் சுகாதார அமைப்பின் மருத்துவவர்கள், மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருபது பேர் அடங்கிய குழுவொன்று தேவையான மருத்துவ வசதிகளுடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல தயாராக உள்ளது.

எமது இந்த மனிதாபிமானச் செயல் முன்னெடுப்பிற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்து தருமாறு நோர்வே வெளிநாட்டு அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.