ஆயுதங்களை கைவிட்டு விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் : லோக்சபாவில் பிரணாப் அறிவிப்பு

புதுடில்லி : ஆயுதங்களை கைவிட்டு விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என பிரணாப்முகர்ஜி லோக்சபாவில் கூறினார் . இலங்கையில் நடக்கும் போர் குறித்து லோக்சபாவில் அறிக்கை தாக்கல் செய்தார் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அப்போது அவர் கூறியதாவது :

விடுதலைப்புலிகள் தமிழ் மக்களுக்கு கடும் சேதம் விளைவித்துள்ளனர் . விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, சரணடைய வேண்டும். அப்பாவி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இதுவே அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்யும் . மேலும் அங்கு நடக்கும் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணவும் உதவும் . ஆனால் போரை நிறுத்தம்படி இலங்கை அரசுக்கு இந்தியா கட்டளையிட முடியாது . இவ்வாறு அவர் தெரிவித்தார். பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் போது சில தமிழ் மக்கள் ராணுவ தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இது துரதிர்ஷ்டமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரணாப் கருத்துக்கு எதிர்ப்பு : அவை 2 முறை ஒத்திவைப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, பாமக எம்.பி.,க்கள் சபாநாயகர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி லோக்சபாவில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை அரை மணி நேரம் (12.15 மணி முதல் 12.45 ) ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய போது பார்லிமென்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை கொல்வதாக கூறினார், தமிழினத்துக்கு பலத்த சேதத்தை விளைவிப்பதாக கூறினார் . இதை கடுமையாக எதிர்த்த மதிமுக, பாமக எம்.பி.க்கள் சபாநாயகர் முன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் லோக்சபாவில் ஏற்பட்ட அமளியால் அவை மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

வெளிநடப்பு :

அவை மீண்டும் கூடிய போது , பிரணாப் கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க., ம.தி.மு.க.,வினர் லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இலங்கை பிரச்னை தொடர்பாக பிரணாப் அறிக்கை அதிருப்தி அளிப்பதாக கூறினர். இந்திய அரசு இலங்கை அரசுக்காக குரல் கொடுக்கிறது என கோஷங்கள் எழுப்பினர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.