எச்1பி விசா: யுஎஸ் சட்டம் என்ன தான் சொல்கிறது?

வாஷிங்டன்: ஒபாமா அரசிடம் நிதி உதவி (பெயில் அவுட்) பெறும் நிறுவனங்கள் இனி எச் 1 பி விசாவில் வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என நிர்பந்திக்கப்படுவதாக சில தினங்களாக பரபரத்துக் கொண்டிருக்கின்றன மீடியாக்கள் (நாம் உள்பட).


இதனால் அமெரிக்க வேலை குறித்த கனவுகளோடு காத்திருப்பவர்களுக்கு பலவித குழப்பங்கள் தோன்றியுள்ளன. இனி இந்த நிறுவனங்கள் எச் 1 பி விசாவில் வெளிநாட்டு ஊழியர்களை சேர்க்கவே முடியாதா?.

அமெரிக்க மீட்பு மற்றும் மறுமுதலீட்டு சட்டத்தின் படி (இதான் ஒபாமாவின் பெயில் அவுட் சட்டத்துக்கு பேர்) எச்1பி விசா, கிரீன் கார்டுகள் குறித்த அமெரிக்க அரசின் நிலை என்ன?

இது குறித்து அமெரிக்காவின் முன்னணி இமிக்ரேசன் வழக்கறிஞரான ராஜிவ் எஸ் கண்ணா அளித்துள்ள விளக்கம் அமெரிக்க கனவுகளுடன் காத்திருப்போரின் கவலைகளை போக்குவதாக அமைந்துள்ளது. அவர் தந்துள்ள விளக்கத்தின்படி எச்1பி விஷயத்தில் இந்த சட்டத்தில் 4 நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன. அதன் விவரம்:

நிபந்தனை 1: அமெரிக்க அரசிடம் நிதிச் சலுகை பெரும் நிறுவனமானது சில நிபந்தனைகளின் அடிப்படையில் எச் 1 பி விசாவில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தலாம். அதே நேரத்தில் இப்போது பணியில் உள்ள எச் 1 பி விசா பணியாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. இவர்களின் க்ரீன் கார்டுக்கோ அல்லது அதற்காக அவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பத்துக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது.

நிபந்தனை 2: இந்த எச்1 பி விசா பணியாளர்களை நம்பியுள்ள நிறுவனங்களுக்கு, அந்த பணியாளர்களின் தேவை எப்போதும் உள்ளதாகவே அர்த்தம். இத்தகைய நிறுவனங்கள் எச்1 பி விசா பணியாளர்களை நம்பியிருப்பவை என வகைப்படுத்தப்படும்.

நிபந்தனை 3: நிதிச் சலுகை பெறும் நிறுவனங்கள் இனி கூடுதலாக பின்பற்ற வேண்டிய நிபந்தனை:

தற்போது பணியில் உள்ள ஒரு அமெரிக்கப் பணியாளரை நீக்கும்போது, அந்த இடத்தில் எச் 1பி விசா பணியாளரை அமர்த்தக்கூடாது. மீண்டும் ஒரு அமெரிக்கரை மட்டுமே அந்த இடத்துக்கு அமர்த்த வேண்டும். அப்படி ஒரு அமெரிக்கப் பணியாளர் வரும்வரை பொறுத்திருக்கலாம்.

நிபந்தனை 4: விதிவிலக்காக சில நேரங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டி வரலாம். அப்படி நியமிக்கப்படும் எச்1பி விசா பணியாளர் உயர் பட்டம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலருக்கு மேல் சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும். பொதுவாக இந்த மாதிரி சிறப்பு பணியாளர்களுக்கு, அமெரிக்காவின் புதிய எச் 1பி விசா நிபந்தனைகள் பொருந்தாது.

இவ்வாறு அந்த சட்டத்தில் உள்ள உள் பிரிவுகளை முழுமையாக ஆராய்ந்து விளக்கம் தந்துள்ளார் ராஜிவ்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.